அமலானது சிஏஏ சட்டம்... அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு - முழு விவரம்
CAA Implementation: நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
CAA Implementation, Central Government: நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act) அமலுக்கு வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. சிஏஏ சட்டம் (CAA) 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலை, இன்று முதல் அமலாவதாக மத்திய அரசு அதன் அரசிதழில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி என பல மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், பல மத்திய அமைச்சர்கள் 2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் சிஏஏ அமலாகும் என உறுதிப்பட கூறியிருந்தனர். அந்த வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன, அதன் விதிகளால் யாருக்கு பயன், பாதிப்புகள் வரும் என எதிர்க்கட்சிகள் கூறும் காரணங்களை இதில் காணலாம்.
சிஏஏ என்றால் என்ன?
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து பாதிக்கப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் உட்பட இஸ்லாமியர் அல்லாத குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிகிறது. மத வன்முறையால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்த இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்.
எதிர்கட்சி தலைவர்கள் முதல் பாஜக ஆட்சி செய்யாத மாநில முதலமைச்சர்கள் என பலரும் இச்சட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இந்த சட்டத்தை திரும்பப் பெற கோரி 2019ஆம் ஆண்டில் பலத்த போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்தன. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
சிஏஏ அமல்: பாதிப்பு வருமா?
இதன்மூலம், இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள், வங்கதேசத்தில் இருந்து வந்த ரோஹிங்கியாக்கள், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் மற்றும் அசாமில் NPR மூலம் குடியுரிமை இல்லாதவர்கள் என அறிவிக்கப்பட்ட சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர். இருப்பினும் இது குடியுரிமை அளிப்பதற்கான சட்டமே தவிர, குடியுரிமையை பறிப்பதற்கான சட்டமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது. எனினும், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவும் எதிர்ப்பு நிலவுகிறது. தங்களது மாநிலத்தில் வங்கதேசத்தினரின் ஆதிக்கம் அதிகரிக்கும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
2019ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலில் குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து வாக்குறுதியை பாஜக அளித்திருந்த நிலையில், அதனை 2024ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன் அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிரதமர் போட்ட பதிவு... கலாய்த்த சுப்பிரமணிய சுவாமி! - அரசியல் களத்தில் பரபரப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ