`ரயிலில் போகவே பயமா இருக்கு` - பீகார் முதல் சென்னை வரை நடக்கும் கொடூர குற்றம் - முழு விவரம்
Indian Railways: ரயில் விபத்துகள் தற்போது அடிக்கடி ஏற்படுவதே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துள்ள மற்றொரு சம்பவமும் அந்த பயத்தை பொதுமக்களிடம் இரட்டிப்பாக்கி உள்ளது.
Indian Railways News: தற்போது சில காலமாக ரயிலில் பயணிப்பது என்பது அச்சத்திற்குரிய ஒன்றாக மாறிவிட்டது. அடிக்கடி ரயில்கள் தடம்புரள்வது, ரயில்கள் மோதி விபத்து ஏற்படுவது என தொடர் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் லேசான அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன. ஏழை, எளிய மக்களின் போக்குவரத்திற்கு ரயில்தான் அதிகம் பயன்படுகிறது எனலாம்.
இரு நகரங்களுக்கு இடையிலான ரயிலாக இருந்தாலும் சரி, நகரத்திற்குள்ளேயே பயன்படுத்தும் மின்சார ரயிலாக இருந்தாலும் சரி அதனை அதிகம் பயன்படுத்துவது எளிய பாமர மக்கள்தான். அப்படியான சூழலில், அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் சிறு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
அச்சத்தை கிளப்பும் சம்பவம்
அந்த வகையில், பீகாரில் நடைபெற்ற ஒரு சம்பவம் ரயில் பயணிகளுக்கு இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கு ரயில்வே துறையும் தற்போது பதிலளித்திருக்கிறது. பீகார் சம்பவத்திற்கு முன்னர் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் கூட மின்சார ரயில் பயணிகளுக்கும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அப்படியென்ன நடந்தது என்பது, ரயில்வே துறை அதுசார்ந்த என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
மேலும் படிக்க | வயநாடு நிலச்சரிவிற்கு பசுவதை தான் காரணம் - பாஜக மூத்த தலைவர்!
பீகாரில் பகல்பூர் - ஜெய்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்த போது, வெளியில் இருந்து யாரோ ஒருவர் கற்களை வீசி தாக்கியதில் பயணி ஒருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. அவர் காயம் அடைந்த புகைப்படம் மற்றும் சம்பவத்தின் வீடியோவும் X தளத்தில் Supaul Voice என்ற பயனாளர் வெளியிட்டுள்ளார்.
பதறவைக்கும் புகைப்படங்கள்
அந்த பதிவில் வெளியிடப்பட்ட புகைப்படம் ஒன்றில், வெளியில் இருந்து ஒருவர் கல்லை வீசுவது பதிவாகியிருக்கிறது, மற்றொரு புகைப்படத்தில் ரயில் பயணி காயமடைந்திருப்பதை காண முடிகிறது. கல்வீச்சு தாக்குதல் நடத்தியவரை கைது செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு உடனடியாக பதிலளித்த ரயில்வே துறை,"இதுகுறித்து புகார் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்டவர் மீது தக்க தண்டனை விதிக்கப்படும். இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என பயணிகளை கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறது.
சென்னையிலும் இதேபோல்...
இந்த சம்பவம் பீகாரில் மட்டுமின்றி, சென்னை மின்சார ரயில் பயணிகளுக்கும் நடந்திருப்பதாக சில பேஸ்புக் பதிவுகள் மூலம் நமக்கு தெரியவருகிறது. தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது, குரோம்பேட்டை - பல்லாவரத்திற்கு இடையே அடையாளம் தெரியாத கும்பல் ரயில் மீது கற்களை வீசியதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட சம்பவத்தை Dhanush AKian என்ற பேஸ்புக் பதிவர் பதிவிட்டிருந்தார். மேலும், ஜன்னல் பக்கம் அமரும் பயணிகள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அதில் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இந்த சம்பவம் குறித்து ஜூலை 4ஆம் தேதி அன்று அந்த பதிவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.