`எங்க கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடாதீங்க...` காங்கிரஸின் வினோத பிரச்சாரம் - காரணம் என்ன?
Lok Sabha Election 2024: காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் மேற்கொண்ட சம்பவம் பலரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
Lok Sabha Election 2024 Phase 2 Polling: 18வது மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப். 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப். 26ஆம் தேதி (நாளை மறுநாள்) அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மணிப்பூர், திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்களில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேசியளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA Alliance), எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி (INDIA Alliance) ஆகியவை மத்தியில் ஆட்சியை பிடிக்க கடும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி (PM Modi) சமீபத்தில் ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்தும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்தும் பேசியது கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. தேர்தல் களமும் இந்த சர்ச்சையால் பரபரப்பாக காட்சியளிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி (Congress) ராஜஸ்தானில் ஒரு வினோதமான பரப்புரை மேற்கொண்டு வருகிறது. அதாவது, ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் தனது வேட்பாளருக்கு 'வாக்களிக்க வேண்டாம்' என காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்ததே பலராலும் வினோதமாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸின் இந்த வினோத பரப்புரைக்கு காரணம் என்ன என்பதை இதில் காணலாம்.
மேலும் படிக்க | வயநாட்டில் தேர்தல் க்ளைமாக்ஸ்: மக்களை சந்தித்த மாவோயிஸ்டுகள், உஷாரான காவல்துறை
ராஜஸ்தானில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பன்ஸ்வாரா-துங்கர்பூர் மக்களவை தொகுதியில்தான் காங்கிரஸ் கட்சி இந்த பரப்புரையே மேற்கொண்டு வருகிறது. மேலும், தனது கட்சி வேட்பாளரான அரவிந்த் தாமோர் என்பவருக்கு பதில் பாரத் ஆதிவாசி கட்சி (Bharat Adivasi Party - BAP) சார்பில் போட்டியிடும் ராஜ்குமார் ரோட் என்பவருக்கு வாக்களிக்கும்படி காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் காங்கிரஸ், பாரத் ஆதிவாசி கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தது. காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, அக்கட்சியால் முதலில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட தாமோர் தனது வேட்புமனுவை திரும்பப்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கடைசி வரை வேட்புமனுவை திரும்ப பெறவே இல்லை. மேலும், அதன்பின்னர் ஊடகம் முன் தோன்றிய தாமோர், இந்த தேர்தலில் தான் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
தற்போது அரவிந்த் தாமோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், பன்ஸ்வாரா-துங்கர்பூர் மக்களவை தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக - காங்கிரஸ் - காங்கிரஸ் ஆதரவான பாரத் ஆதிவாசி கட்சி என மூன்றும் பந்தயத்தில் இருக்கிறது. இதில் காங்கிரஸின் ஓட்டுகளை அரவிந்த் தாமோர் பிரிப்பார் என எதிர்பார்க்கப்படுவதால், இங்கு பாஜக வேட்பாளரான மகேந்திரஜித் சிங் மால்வியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்தே காங்கிரஸ் கட்சி அரவிந்த் தாமோருக்கு பதில் பாரத் ஆதிவாசி கட்சியின் ராஜ்குமாருக்கு வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியால் முதலில் நிறுத்தப்பட்ட அரவிந்த் தாமோர் கூறுகையில், BAP கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்ததால் பல தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர், அவர்களின் ஆதரவு கட்சியில் எனக்கு உள்ளது என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ அர்ஜூன் பாம்னியாவின் மகனும், அம்மாவட்டத்தில் முக்கிய கட்சி பொறுப்பில் இருக்கும் விகாஸ் பாம்னியா கூறுகையில்,"எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். நாங்கள் பாரத் ஆதிவாசி கட்சியின் வேட்பாளரையே ஆதரிக்கிறோம். நாங்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், கட்சியின் முடிவுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் செயல்படுகிறோம்" என்றார். இங்கு வரும் ஏப். 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பரப்புரை ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ