வயநாட்டில் தேர்தல் க்ளைமாக்ஸ்: மக்களை சந்தித்த மாவோயிஸ்டுகள், உஷாரான காவல்துறை

Lok Sabha Elections: இன்று அதிகாலை, விவசாய நிலப்பகுதிகளுக்கு வந்த மாவோயிஸ்ட் குழுவினர், அங்கிருந்த மக்களிடம் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 24, 2024, 04:56 PM IST
  • கேரளாவின் விஐபி தொகுதியாக கருதப்படும் வயநாட்டின் மீது அனைவரது பார்வையும் உள்ளது.
  • நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், கம்பமாலாவில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகம்.
  • நடவடிக்கைகளைத் தொடங்கிய கேரளா போலீஸ்.
வயநாட்டில் தேர்தல்  க்ளைமாக்ஸ்: மக்களை சந்தித்த மாவோயிஸ்டுகள், உஷாரான காவல்துறை title=

Lok Sabha Elections: 2024 மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு சென்ற வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19 அன்று நடந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 அன்று நடக்கவுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களின் பல தொகுதிகளில் வெள்ளிக்கிழமை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.   

கேரளாவின் விஐபி  தொகுதியாக கருதப்படும் வயநாட்டின் மீது அனைவரது பார்வையும் உள்ளது. இங்கு, காங்கிரஸ்  (Congress) கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) சார்பில் ஆனி ராஜாவும், பா.ஜ.க. (BJP) சார்பில் மாநில தலைவர் கே. சுரேந்திரனும் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ் கட்சி ஆகிய இரண்டுமே இந்தியா கூட்டணியின் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், கேரளாவில் வயநாடு மாவட்டம் தலபுழா அருகே உள்ள கம்பமாலாவில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளன. ஏப்ரல் 24 புதன்கிழமை அதிகாலை, விவசாய நிலப்பகுதிகளுக்கு வந்த மாவோயிஸ்ட் குழுவினர், அங்கிருந்த மக்களிடம் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டனர். சிபி மொய்தீன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு காலை 6.10 மணியளவில் வந்து மக்களை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் பற்றிய செய்தி கிடைத்ததும், கேரளா போலீசும், இந்திய ரிசர்வ் பட்டாலியனின் கீழ் கேரள காவல்துறையின் உயரடுக்கு கமாண்டோ படையான தண்டர்போல்ட்ஸ் (Thunderbolt) குழுவும், கம்பமாலா வன மண்டலத்தில் தக்கள் நடவடிக்கைகளைத் தொடங்கினர். சிபி மொய்தீன், சந்தோஷ், சோமன், ஆஷிக் ஆகிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் படிக்க | டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: மண்டை ஓடு, தற்கொலை மிரட்டல்.. போலீசார் குவிப்பு

சம்பவ இடத்தில் ஒரு தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில், மாவோயிஸ்ட் குழுவைச் சேர்ந்த இருவர் அப்பகுதி மக்களிடம் பேசுவதைக் காண முடிகின்றது. இருவரும் கையில் ஆயுதம் ஏந்தியிருப்பது வீடியோ காட்சிகளில் தெரிகின்றது. "தேர்தலில் வாக்களிப்பதால் எந்த பலனும் இல்லை" என்று அவர்களில் ஒருவர் கூறுவதும் கேட்கிறது. 

கம்பமலை ஒரு தோட்ட விவசாய பகுதியாகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள்  தோட்டத் தொழிலாளர்கள். மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை மக்கள் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 

மாவோயிஸ்டுகள் இப்பகுதி மக்களை தொடர்பு கொள்வது இது முதல் முறையல்ல. கம்பமலையில் உள்ள வன வளர்ச்சிக் கழகத்தின் மானந்தவாடி கோட்ட மேலாளர் அலுவலகத்தில் புகுந்த மாவோயிஸ்டுகளின் கும்பல் அங்கிருந்த ஊழியர்களை மிரட்டியது. தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த குடியிருப்பு வசதிகள் வேண்டும் என கோரிக்கை விடுத்த மாவோயிஸ்டுகள்,  மாவோயிஸ்ட் கண்காணிப்புக்காக போலீசார் பொருத்தியிருந்த கேமராக்களையும் அழித்தனர். தொடர்ந்து மாவோயிஸ்டுகளின் ஊடுருவல் இருந்து வந்ததால், தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்புக் கோரி போராட்டம் நடத்தினர்.

தற்போது தேர்தலுக்கு சற்று முன் மாவோயிஸ்டுகள் மீண்டும் மக்களை சந்திக்கும் முயற்சியில் ஈடுபடுவதையடுத்து அப்பகுதிகளில் பாதுகப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வாக்களிக்க தயாராகும் வயநாடு: அனல் பறக்கும் பிரச்சாரம், பதில் கூற காத்திருக்கும் மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News