நவ்ஜோத் சிங் சித்து ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறாரா?
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நவ்ஜோத் சிங் சித்து நேற்று திடீர் என்று மேல்-சபை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் கேட்ட போது:- சித்து எங்கள் கட்சியில் இணைந்தால் வரவேற்போம் என்று தெரிவித்தனர்.
நவ்ஜோத் சிங் சித்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தால் அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. சித்து பாராதிய ஜனதாவில் இருந்த போது அவரை கெஜ்ரிவால் பலமுறை சந்தித்து பேசிய விவரம் தற்போது வெளிவந்துள்ளது. எனவே சித்துவை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து அவர் தலைமையில் தேர்தலை சந்திக்க கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஆனால் நவ்ஜோத் சிங் சித்து இந்த விவகாரத்தில் மவுனமாக உள்ளார். ஆனால் இது குறித்து அவரது மனைவி நவ்ஜோத் கவுர் சித்து கூறும்போது :- ஆமாம் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். ஆனால் நான் செய்யவில்லை. அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததில் ஒரு அர்த்தமுள்ளது. அவருக்கு இதில் ஒரு தெளிவான பார்வை உள்ளது. அவர் பஞ்சாப்புக்கு சேவை செய்வார். அவர் பஞ்சாப்புக்கு எதிராக எந்த வழியையும் தேர்வு செய்யமாட்டார் என கூறினார்.
நவ்ஜோத் சிங் சித்து பாராதிய ஜனதாவில் அதிருப்தியில் இருந்தார் என கூறப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனது அமிர்தசரஸ் தொகுதியை தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் அருண்ஜெட்லிக்காக விட்டுக் கொடுத்தார். அது முதல் அதிருப்தியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.