மகாராஷ்டிரா: 125 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்ட பாஜக
இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான 125 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்தமுறை சத்ரபதி சிவாஜி மகாராஜின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான (Maharashtra Assembly Elections 2019) வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக (Bharatiya Janata Party) இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது. இந்த பட்டியலில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) உட்பட 125 வேட்பாளர்கள் உள்ளனர். முதல்வர் ஃபட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார். பாஜக தனது 12 எம்எல்ஏக்களின் டிக்கெட்டை குறைத்துள்ளது. முதல் பட்டியலில் 52 எம்.எல்.ஏக்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை கட்சி 12 பெண்களுக்கும் டிக்கெட் வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கோதுர்ட் தொகுதியில் போட்டியிடுவார்.
சிறப்பு என்னவென்றால், இந்த முறை லோக்மண்ய திலக் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜின் குடும்ப உறுப்பினர்களையும் பாஜக பரிந்துரைத்துள்ளது. புனே மேயர் முக்தா திலக் "காஸ்பா பெத்" தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளார். முக்தா திலக் லோக்மண்ய திலக்கின் மருமகள் ஆவார். அதே நேரத்தில், சத்ரபதி சிவாஜி மகாராஜின் குடும்பத்தைச் சேர்ந்த சிவேந்திரசிங் அபய் சிங் ராஜே போன்ஸ்லே "சதாரா" தொகுதிக்கு பாஜகவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில், காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்த ராதாகிருஷ்ணா விகே பாட்டீல் "ஷீர்டி" தொகுதியில் களம் காண்கிறார். மகாராஷ்டிரா அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் கிரிஷ் மகாஜன் "ஜாம்னர்" தொகுதியல் வேட்பாளராக அறிவிகப்பட்டு உள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியான மாநிலங்களுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே நேற்று (திங்கக்கிழமை) பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஹரியான மாநிலத்தின் மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முதல் 78 வேட்பாளர்களை பட்டியலை வெளியிட்டது. இதனையடுத்து, இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான 125 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
சிவசேனா மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சியிலும் சமீபத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களைச் சேர்த்துள்ளனர். அவர்களுக்கும் இந்த முறை டிக்கெட் வழங்கப்படலாம் எனத்தெரிகிறது.
மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு மொத்தம் 289 தொகுதிகள் உள்ளன. அதில் 288 தொகுதிகளில் நேரடியாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ள 1 தொகுதி வேட்பாளர் பரிந்துரைக்கப்படுவார். எனவே மொத்தம் 288 தொகுதிக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும். அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.