அசாமில் கட்டப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான ரயில் மற்றும் சாலைப் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் நகரின் அருகே பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே, 4.94 கிலோ மீட்டர் நீளத்துக்கு போகிபீல் பாலம் (Bogibeel) கட்டப்பட்டுள்ளது. கடந்த 1997 ஆம் ஆண்டு தேவகவுடா பிரதமராக இருந்த போது திட்டமிடப்பட்டு, 2002 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. 16 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் தற்போது நிறைவுற்று, கடந்த 3 ஆம் தேதி ரயில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


சுமார் 5 ஆயிரத்து 960 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். 2 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள போகிபீல் பாலத்தின் கீழடுக்கில் இருவழி ரயில்பாதையும், மேலடுக்கில் 3 வழிச்சாலைகளும் அமைந்துள்ளன.



இவ்வழியே அசாமின் தின்சுகியாவிலிருந்து, அருணாச்சலப்பிரதேசத்தின் நகர்லாகுனுக்கு ரயிலில் சென்றால் 10 மணி நேரம் மிச்சமாகும். அவசர காலங்களில் பாதுகாப்புப் படையினர் வடக்குப் பகுதிக்கு விரைந்து கொண்டு செல்ல போகிபீல் பாலம் உதவியாக இருக்கும்.