கர்நாடக முதல்வராக 4வது முறையாக இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார் எடியூரப்பா!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தன.


இதையடுத்து குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட கவர்னர், புதிய அரசு அமையும் வரை முதல்வராக பதவியில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார். 


இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா இன்று காலை 10 மணிக்கு பெங்களூரு ராஜ்பவனில் அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏக்கள் தன்னிடம் இருப்பதாகவும், இன்றைய தினமே பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறும் ஆளுநரிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். 


இன்று மாலை 6 மணிக்கு எடியூரப்பா தலைமையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.எக்களில் 3 எம்.எல்.ஏக்களை நேற்று சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.