தமிழ்நாடு அரசு முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் முழு விவரம்
Tamilnadu Government NEEDS Scheme Loan | படித்த இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நீட்ஸ் (NEEDS) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் 5 கோடி ரூபாய் வரை கடனுதவியும், 75 லட்சம் ரூபாய் வரை மானியும் பெறலாம்.
தமிழ்நாடு அரசு படித்த இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் வகையில் கொண்டு வந்திருக்கும் திட்டம் தான் நீட்ஸ். அதாவது முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் அரசின் 'புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்' (Tamilnadu Government NEEDS Scheme Loan) கீழ் கடனுதவி பெற்று பயன்பெற முடியும்.
இந்த திட்டத்தில் சேர இளைஞர்களுக்கு தகுதி என்னவென்றால், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐ.டி.ஐ. தொழிற்கல்வி படித்தவர்கள் NEEDS திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். அதிகபட்சமாக ரூ. 5 கோடி வரை இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும். ரூ. 75 லட்சம் வரை மானியம் அரசே கொடுக்கிறது.
அதாவது ரூ. 75 லட்சம் வரை திரும்ப செலுத்த தேவையில்லை. வேலை வாய்ப்பு அதிகரிக்கவும், புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசே கடன் வழங்கி வருகிறது.
சதவீத அடிப்படையில் பார்க்கும்போது நீட்ஸ் திட்டத்தில் வழங்கப்படும் கடனுக்கு 25 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. பயனாளர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப 10 லட்சம் ரூபாய் முதல் ரூ. 5 கோடி வரை கடன் உதவியை பெறலாம். வங்கிகள் மூலமாக இந்த கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில் மிக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதனால் தொழில் முனைவோர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணப்பித்தால் கடன் உதவி கிடைக்கும்.
நீட்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விண்ணப்பத்தாரர் 21 வயதில் இருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயதாக 45 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றால் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேதியில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு என்பது கிடையாது. குறைந்தபட்சம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் அதிகபட்சமாக ரூ. 5 கோடி வரையில் உற்பத்தி சார்ந்த அனைத்து தொழில்களையும் துவங்கலாம்.
மேலும், இத்திட்டத்தில் பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் தனது திட்ட மதிப்பீட்டில் பங்காக 5 சதவீதம் செலுத்த வேண்டும். நீட்ஸ் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தை அணுகலாம். அல்லது www.msmeonline.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.