ஜம்மு: எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தங்களுக்கு ரொட்டியும், டீயும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்க செல்வதாகவும் வீடியோ மூலம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்லைப் பாதுகாப்புப் படையின் 29-வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ் எனும் வீரர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில் தங்களுக்கு ரொட்டியும், பாலும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், காய்கறிகளோ, தொட்டுக்கொள்ள ஊறுகாயோ வழங்கப்படுவதில்லை, வேக வைத்த பருப்பு மட்டுமே வழங்கப்படுகிறது என புகார் தெரிவித்தார். 


மேலும் எல்லையில் சுமார் 10- 11 மணி நேரத்துக்கும் மேல் நின்று கொண்டே, மோசமான தட்பவெப்ப நிலையில் பணி புரியும் நாங்கள் பெரும்பாலும் வெறும் வயிற்றுடன் தூங்கச் செல்வதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து  Zee Media-விடம் பேசிய யாதவ், முகாமில் அதிகாரிகளிடம் துணை நிலையான உணவு எதிராக புகார் கொடுத்துள்ளோம், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.


எல்லையை காக்கும் எங்களுக்கு வழங்கப்படும் அநீதி இது எனத் தெரிவித்த அவர், இந்த வீடியோ வெளியாகும்போது தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் எனவும் கூறியுள்ளார். 


முகாமில் தங்களுக்கு வழங்கப்படும் ரொட்டி, டீயை வீடியோவில் பதிவு செய்த யாதவ், இக்குறைகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து டிவிட்டரில் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உள்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.