எதிர்க்கட்சிகள் தவறாக தகவல்களை பரப்புகின்றனர்: பிரதமர் மோடி
இந்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். தேசிய தலைநகரில் 1734 காலனிகளை பதிவு முறைப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க பா.ஜ.க இன்று காலை 11 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தது. தீவிரவாத அச்சுறுத்தலால் இக்கூட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அப்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்துப் கருத்துத் தெரிவித்த அவர், உயர் பதவிகளில் இருப்பவர்கள் போலி வீடியோக்களைப் பகிர்ந்து மக்கள் தூண்டிவிடுகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பு.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஒருசில கட்சிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக மத்திய அரசு 1.5 கோடி வீடுகளை கட்டித் தந்துள்ளதாகவும், அவர்களிடம் மதம் குறித்து கேட்டதில்லை எனவும் பிரதமர் கூறினார். குடியுரிமை சட்டத்திருத்தம் இந்திய குடிமகன் யாரையும் பாதிக்காது எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டம்தான், உலகிலேயே மிகப்பெரிய சுகாதார திட்டம் என்றும், நாடு முழுவதும் உள்ள 50 கோடி ஏழைகள், 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சையை இலவசமாக பெற முடிகிறது என்றும் மோடி தெரிவித்தார். ஆனால் அரசியல் காரணத்துக்காக டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றும் மோடி குறிப்பிட்டார்.
இறுதியாக இந்திய மக்களின் நலனுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றிய நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மதிக்க வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டார்.