ரூ.2000 கோடி லஞ்சம்...? அதானியுடன் ஒப்பந்தம் போடவில்லை - செந்தில் பாலாஜி சொல்வது என்ன?

Adani Bribery Case: அதானி குழுமத்துடன் தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வணிக ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 21, 2024, 04:44 PM IST
  • சுமார் 2000 கோடி ரூபாய் அளவில் லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது வழக்கு
  • சூரிய ஒளி மின்சக்தியை கைப்பற்ற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த வழக்கு தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடுக்கப்பட்டுள்ளது.
ரூ.2000 கோடி லஞ்சம்...? அதானியுடன் ஒப்பந்தம் போடவில்லை - செந்தில் பாலாஜி சொல்வது என்ன? title=

Adani Bribery Case Latest News Updates: இந்தியாவில் சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களை கைப்பற்ற அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் வழங்கியதாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தைச் சேர்ந்த கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் இந்தியாவின் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களை கைப்பற்ற சுமார் 256 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, சுமார் 2029 கோடி ரூபாய் அளவில் லஞ்சம் கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

திமுக அரசுக்கும் தொடர்பா...?

2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு காலகட்டம் வரையில், மாநில மின்சார வாரியங்களின் ஒப்பந்தங்களை கைப்பற்றவே அதானி குழுமம் பெருந்தொகையை கைமாற்றியிருப்பதாக குற்றஞ்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒடிசா (நவீன் பட்நாயக் - பிஜூ ஜனதா தளம் ஆட்சிக்காலம்), தமிழ்நாடு (தற்போதை திமுக ஆட்சிக்காலம்), சத்தீஸ்கர் (காங்கிரஸ் ஆட்சிக்காலம்), ஜம்மு காஷ்மீர் (மத்திய அரசு ஆட்சிக்காலம்), ஆந்திரா பிரதேசம் (ஜெகன்மோகன் ரெட்டி - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்காலம்) ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் வழங்கியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

ஆந்திராவுக்கு அதிக தொகை...?!

இதில் ஆந்திராவில் மட்டும் 2.3 கிகாவாட் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தத்தை பெற 'Foreign Official #1' என வழக்கில் புனைப்பெயரில் குறிப்பிடப்பட்டுள்ள ஆந்திரா அதிகாரிக்கு மட்டும் 228 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகிறது. அதாவது மற்ற மாநிலங்களை விட ஆந்திராவுக்கே பெரிய தொகை கைமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Exit Poll: மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சியமைக்கப்போவது யார்? Zeenia AI கணிப்பு...!

ஏன் அமெரிக்காவில் வழக்கு?

இந்த சட்டவிரோத செயல்களை மறைத்து அமெரிக்க வங்கிகளிடம் இருந்தும், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி குழுமம் பில்லியன் கணக்கில் சூரிய ஒளி மின்சக்தி சார்ந்த திட்டத்திற்கு நிதி திரட்டியிருக்கிறது என அதானி குழுமம் மீது வழக்கு தொடுத்த வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். மேலும், அதானி குழுமம் லஞ்சம் கொடுத்து கைப்பற்றிய ஒப்பந்தங்களின் மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.16 ஆயிரம் கோடி) அளவில் லாபம் ஈட்டவும் வாய்ப்பிருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

லஞ்சம் கொடுத்தது இந்திய அதிகாரிகளுக்கு என்றாலும், அமெரிக்க முதலீட்டாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்நாட்டின் சட்டப்படி வழக்கு அமெரிக்காவிலேயே விசாரிக்கப்படும் எனவும் தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்தாண்டு கௌதம் அதானி உறவினர் சாகர் அதானியின் நியூயார்க் வீட்டில் அமெரிக்காவின் எஃப்பிஐ சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. 

செந்தில் பாலாஜி அளித்த விளக்கம்

இந்நிலையில், அதானி குழுமத்திடம் தமிழ்நாடு அரசு ஏதும் கடந்த 3 ஆண்டுகளில் ஒப்பந்தம் போடவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது விளக்கம் அளித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி (TN Minsiter Senthil Balaji), "அதானி குழுமத்துடன் தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வணிக ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டிற்கான மின்தேவையை கருத்தில் கொண்டு ஒன்றிய மின்சாரத்துறையுடன் 1500 மொகா வாட் மின்சாரம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறிப்பாக சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்சாரத் துறை எந்த விதத்திலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. சமூக ஊடகங்களில் முற்றிலும் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியத்தின் விரிவான விளக்கம்

அதை தொடர்ந்து, தமிழ்நாடு மின்வாரியமும் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில்,"ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியை பயன்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் செலுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் விதியின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் சூரிய ஒளி மினசாரத்தை வாங்க வேண்டியுள்ளது. அப்படி வாங்காதபட்சத்தில் பல்வேறு விதமான அழுத்தங்களை மாநில அரசுகளுக்கு, ஒன்றிய அரசு உருவாக்குகிறது. 

இதன் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியம் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரையிலும் திமுக ஆட்சி அமைந்த பிறகு, அதாவது 2021ஆம் ஆண்டுக்கு பிறகு அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரம் தொடர்பாக எந்த நேரடித் தொடர்பிலும் இல்லை. Solar Energy Corporation Of India (SECI) என்ற ஒன்றிய அரசின் நிறுவனத்திடம்தான் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து சூரிய மின்சார கொள்முதலைச் செய்கிறது. 

அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம்

மின் கொள்முதலுக்கான விலையை SECI நிறுவனம்தான் நிர்ணயம் செய்கிறது. மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அந்த விலையை அங்கீகரிப்பதா, நிராகரிப்பதா என்பைத முடிவு செய்கிறது. அதிமுக ஆட்சியில் ஒரு யூனிட்டுக்கு 7.25 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் நேரடி ஒப்பந்தம் கையொப்பமிட்டது. 

ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் திமுக ஆட்சியில் திமுக அரசு அதானி நிறுவனத்துடன் எந்தவிதமான ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. திமுக ஆட்சியில் SECI நிறுவனத்துடன் மட்டுமே, அதுவும் ஒரு யூனிட்டுக்கு 2.61 ரூபாய் என தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. தற்போதைய மாநில அரசின் அனைத்துவிதமான வரவு செலவும் SECI நிறுவனத்துடன் மட்டுமே உள்ளது, தவிர எந்தவிதமான தனிப்பட்ட நிறுவனங்களுடனும் இல்லை. 

தங்களின் மின் தேவைகளுக்காக மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கும் மாநில மின்வாரியங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அதானி நிறுவனத்திடமிருந்து பெற்று மின்சாரத்தை விற்கும் புரோக்கராக SECI செயல்பட்டது என அமெரிக்க நீதிமன்றம் குறிப்பிடுகிறது. அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் வழங்கியது என்றால் எந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்பதைத்தான் விசாரிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது. 

கௌதம் அதானிக்கு நெருக்கடி

அமெரிக்க நீதிமன்றம் கௌதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு மிக மிக குறைவு. அவர் கைது செய்யப்படவில்லை என்றாலும் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது. இனி அவரின் பங்குகளில் வெளிநாட்டு முதலீடுகள் வருவது கடினம். குறிப்பாக அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது குறையும். தற்போது முதலீடு செய்திருப்பவர்களும் வெளியேறுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், கௌதம் அதானிக்கு நெருக்கடி அதிகரிக்கலாம். தற்போதே ரூ.3 லட்சம் கோடி வரை முதலீடுகள் வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | கலைஞர் கனவு இல்லம் திட்டம் இவர்களுக்கு எல்லாம் கிடைக்காது..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News