சிபிஐ இயக்குனர், சிபிஐ சிறப்பு இயக்குனர் இடையே அதிகார மோதல் நிலவி வந்த சூழலில், சிறப்பு இயக்குனர் மீதே சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிபிஐயின் தலைமை அதிகாரியான அலோக் வர்மா, அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரி ராகேஷ் அஸ்தானா இருவருக்குமிடையே முரண்பாடு இருந்து வந்தது. இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா மீது லஞ்ச புகார் சுமத்தப்பட்டுள்ளது உள் முரண்பாட்டினை அதிகப்படுத்தியுள்ளது.


ராகேஷ் அஸ்தானா அரசாங்காத்திற்கு எழுதிய கடிதத்தில், தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ளார். அஸ்தானாவின் மீது ஹைதராபாத் தொழில் அதிபர் சதீஷ் சனா புகார் கொடுத்துள்ளார். சதீஷ் சனா, இறைச்சி ஏற்றுமதியாளரான மொயீன் குரோஷி என்பவர் பண மோசடி செய்த வழக்குடன் தொடர்புடையவர் ஆவார்.


சதீஷ் சனா சிபிஐக்கு அளித்த அறிக்கையில், ராகேஷ் அஸ்தானாவிற்கு, 2017 டிசம்பர் மாதத்திலிருந்து 10 மாத காலமாக 2 கோடி கொடுக்கப்பட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனால், அஸ்தானா மொயீன் குரோஷிக்கு எதிராக இருக்கும் சிபிஐ வழக்கில் செயல்பட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


சிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறி வந்த நிலையில் பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் மொயின் குரேஷி வழக்கை விசாரிக்கும் குழுவின் தலைவரான ராகேஷ் அஸ்தானா, 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.


இடைத்தரகர் மனோஜ் குமார் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் மூலமே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல், இந்த வழக்கில் இந்திய உளவுப் பிரிவான ரா அமைப்பின் சமந் குமார் கோயலின் (Samant Kumar Goel) பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.