விமானப் பாதுகாப்புத் துறையின் தலைவரானார் ராகேஷ் அஸ்தானா...
CBI-ன் இணை இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, விமானப் பாதுகாப்புத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
CBI-ன் இணை இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, விமானப் பாதுகாப்புத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
CBI-ன் முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா-விற்கு இடையே ஏற்பட்ட பனிப்போரால் இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு. மேலும் CBI-ன் இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ்-னை நியமித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கில் மீண்டும் அலோக் வர்மாவை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா டெல்லி CBI தலைமை அலுவலகத்துக்கு வந்து மீண்டும் CBI இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையே, CBI இயக்குனர் அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய உயர்நிலைக் குழு ஆலோசனை கூட்டம் நடத்தி அலோக் குமார் வர்மாவை, CBI இயக்குநர் பதவியில் இருந்து மாற்றி தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை தலைமை இயக்குநராக நியமித்தது. எனினும், அப்பதவியை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
இந்த விவகாரம் சர்ச்சைகளுக்கு வழிவகுக்க., CBI இணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவை CBI அமைப்பில் இருந்து மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று ராகேஷ் அஸ்தானா-வை விமான பாதுகாப்புத் துறையின் தலைவராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,'' CBI-யில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ராகேஷ் அஸ்தானா, விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையின் தலைவராக நியமிக்கப்படுகிறார். இவரின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும்'' என குறிப்பிட்டுள்ளது.
CBI முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவை நீக்கியது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தற்போது அஸ்தானா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.