வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக எல்லை மீறும் விளம்பரங்கள் - எச்சரிக்கும் மத்திய அரசு.!
Shamefull Ads : சமீபத்தில் வெளியாகும் விளம்பரங்கள் எல்லை மீறும் வகையில் இருப்பதால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளன.
பாலின சமத்துவம், கறுப்பு - வெள்ளை ஏற்றத்தாழ்வு நீக்கம், சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு போன்ற சிந்தனைகள் வளர்ந்த காலகட்டத்திலும் தொடர்ந்து வெட்கித் தலைகுனியும் அளவுக்கு விளம்பரங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அழகை பொலிவுடன் காட்ட முதலில் கறுப்பான நிறத்தில் ஒரு பெண் வந்து, சில நாட்கள் கழித்து மீண்டும் வெள்ளையாவது போல் காட்டப்பட்ட விளம்பரங்கள் ஏராளம். கறுப்பென்றால் அழகில்லையா என்ற விவாதம் வலுவடைந்ததை அடுத்து இதுபோன்ற விளம்பரங்கள் ஓரளவுக்கு குறைந்துள்ளது.
ஆனாலும், பொதுச்சமூகத்தில் இந்த கறுப்பு - வெள்ளை மீதான பிம்பம் பெரும்பாலும் அப்படியேதான் இருக்கின்றன. இப்போதும்கூட புதிதாக இந்த பூமியில் ஒரு குழந்தை பிறந்து காலடி எடுத்துவைத்தபின், கேட்கப்படும் முதல் கேள்வி, ‘குழந்த கறுப்பா இருக்கா ; வெள்ளையா இருக்கா’ என்பதுதான்.
மேலும் படிக்க | பெண்களின் மார்பகங்களை காட்டிய அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் விளம்பரத்திற்கு தடை!
இதுமாதிரியான பொதுப்புத்தியில் இருந்து மக்களை மீட்டெக்கும் பொறுப்பு சிந்தனைகளையாளர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், சமூக சீர்த்திருத்தவாதிகளுக்கும் மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு. அப்படியிருக்க ஊடகத்தினருக்கு இதில் பெரும் பங்கு உண்டுதானே. மக்களையும், பொருளையும் ஈர்ப்பதற்காக, சமத்துவத்திற்கு எதிரான பொதுப்புத்தி சிந்தனைக்கு தீனி போடும் வகையில் விளம்பரங்களை எடுத்து பிரபலப்படுத்தும் இழிவான அரசியலே இங்கு மேலோங்கி இருக்கின்றன. சில தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிவரும் விளம்பரங்கள் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு நிலைமை கைமீறி போயிருக்கின்றன. மத்திய அரசே இதில் தலையிட்டு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு.!
பிரபல வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் இடம் பெற்ற காட்சிகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. அதில், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நான்கு பேர் பொருட்கள் வாங்க வருகின்றனர். அதே இடத்தில் சற்றுத்தள்ளி ஒரு பெண் நின்றுகொண்டிருக்கிறார். அப்போது அந்த நான்கு பேரில் ஒருவர் எதிரே உள்ள அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசும் வசனம் இது, ‘நாம் 4 பேர் இருக்கிறோம். ஆனால், நம்மில் ஒரே ஒருவருக்குதான் இந்த ஷாட் கிடைக்கும்’. இதனைக் கேட்டு அதிர்ச்சியில் அந்தப் பெண் திரும்புகிறார். அதற்குப்பிறகுதான் தெரிகிறது, அந்த 4 பேரும் ‘ஷாட்’ எனப்படும் வாசனைத் திரவியத்தைப் பற்றி பேசியிருக்கிறார்கள் என்று.
இதனால் அந்தப் பெண் நிம்மதி பெருமூச்சு விடுகிறார். பிரபல நிறுவனத்தின் இந்த விளம்பரத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாலியல் வன்முறையை தூண்டும் வகையில் இந்த விளம்பரம் இருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளை ஊக்குவிக்கும் வகையில் ரொமாண்டிசைஸ் செய்வதாகவும் நடிகர்கள் முதல் அரசியல் அமைப்பினர் வரை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உடனடியாக இந்த விளம்பரத்தை நீக்குமாறு ட்விட்டர் மற்றும் யூடியூப் தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல், மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தது. அதில், பெண்களின் கண்ணியத்தை மீறும் வகையில் இருக்கும் விளம்பரங்கள் இருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும் படிக்க | Cadbury: பழைய விளம்பரத்தில் பாலின சமத்துவம் என்ற புது வண்ணம் கொடுக்கும் கேட்பரி
இந்நிலையில், கல்வி தொடர்பான ஆன்லைன் கல்வி நிறுவன விளம்பரம் ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விளம்பரம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட ஆன்லைன் கல்வி நிறுவனங்களில் அனைவரும் படிக்க வருமாறு அழைக்கிறது. ஏனென்றால், அந்த கல்வி நிறுவனத்தில் படித்த 9 வயது சிறுவன் அதிபுத்தியாலியாகி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யதார்த்தத்திற்கு கொஞ்சமும் பொருந்தாத இதுபோன்ற விளம்பரங்களுக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக இந்த ஆன்லைன் விளம்பர நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சாத்தியமில்லாத விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடும் சில ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR