அயோத்தியில் சர்ச்சைக்குள்ளாகாத நிலப் பகுதியை ராமஜென்ம பூமி நிவாஸ் அமைப்பின் வசம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதிரடி கோரிக்கையை முன்வைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயோத்தியில் குறிப்பிட்ட இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று ராமஜென்ம பூமி இயக்கத்தினரும், சன்னி வஃபு வாரியமும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.


முன்னர் அறிவித்தப்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், இவ்வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எஸ்.ஏ.போப்டே இன்று விசாரணையில் பங்கேற்க இயலாத சூழலால், விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றி கையகப்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குள்ளாகாத நிலத்தை ராமஜென்ம பூமி  நிவாஸ் அமைப்பிடம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும். மொத்தம் கையகப்படுத்தப்பட்டுள்ள 67 ஏக்கர் நிலத்தில் 0.313 ஏக்கர் நிலம் மட்டுமே சர்ச்சைக்குரியது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 1992 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதனைச் சுற்றி மொத்தம் உள்ள 67 ஏக்கர் நிலமும் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. மொத்த நிலம் 67 ஏக்கராக இருப்பினும் 2.7 ஏக்கர் நிலத்தில்தான் தற்போது பிரச்னையும் வழக்கும் உள்ளது. 


இந்த 2.7 ஏக்கர் நிலத்தை தவிர்த்து மற்ற இடத்தை தங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது. 


மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அளித்த பேட்டியில், ராமர் கோயில் வழக்கு எந்தவித தாமதமும் இன்றி விரைந்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். 70 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறிய அவர், வெகு விரைவில் அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.