மத்திய மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. சட்ட விதிமுறைகளுக்கு இன்றைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் ஒப்புதல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டம் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் ஜி.எஸ்.டி. சட்டத்தின் அனைத்து அம்சங்களும் பூர்த்திசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இன்றைய கூட்டத்தின் முடிவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யின் இறுதி வரைவுகள் கவுன்சில் உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அதற்கு அனைத்து மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் ஆதரவு அளித்துள்ளனர் என்றும் கூறினார்.


மாநில ஜி.எஸ்.டி.யை அந்தந்த மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும். இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அடுத்த மூன்று நாட்களுக்குள் அனுப்பப்படும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.


மாநில ஜி.எஸ்.டி. மற்றும் யூனியன் பிரதேசகளின் ஜி.எஸ்.டி. குறித்து மார்ச் 16-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் மார்ச் 9-ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கூட்டத்தில் மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யின் இறுதி வரைவுகள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


மேலும், வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. சட்டம் முழுமையாக அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.