அடுத்தமாதம் ஆந்திரா வருகை புரியும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு கொடி காட்டப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் ஜனவரி 6-ஆம் நாள் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி-க்கு எதிர்ப்பு கொடி காட்டப்படும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனவும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.


அனந்தபுரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் இதுதொடர்பான அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார். கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசுகையில்...


ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து பெற பிரதமர் மோடியை 29 முறை சந்தித்து பேசியுள்ளோம். ஆனால் சிறப்பு அந்தஸ்து தரவில்லை. குஜராத்தை விட ஆந்திரா முன்னேறி விடக்கூடாது என்று நினைக்கிறார் மோடி.


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனை சந்தித்த போது கூட பெயரை சொல்லி அழைத்த நான், மாநில சிறப்பு அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியை மிக மரியாதையாக சார் என்று அழைத்தேன். ஆனால் அவர் சிறப்பு அந்தஸ்து தராமல் ஏமாற்றி விட்டார்.


பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பழி வாங்கப்படுகிறார்கள். அவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற சோதனைகள் தொடுக்கப்படுகின்றன. இது தெலுங்கு தேச கட்சிக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அல்ல. ஆந்திர மக்கள் மீது மோடி நடத்தும் தாக்குதல்.


ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் பிரதமர் மோடி எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஆத்திர மாநிலம் வருகின்றார். அவரது வருகையை எதிர்த்து மாநிலம் முழுவதும் பொதுமக்களும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களும் போராட்டம், எதிர்ப்பு பேரணி ஆகியவற்றை நடத்த வேண்டும் என குறிப்பிட்டார்.