பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணியை 6 km கட்டிலில் சுமந்து சென்ற CRPF வீரர்!
பிரசவ வலியால் துடித்த பெண்ணை CRPF வீரர்கள் கட்டிலில் வைத்து 6 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்!
பிரசவ வலியால் துடித்த பெண்ணை CRPF வீரர்கள் கட்டிலில் வைத்து 6 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்!
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நேற்று CRPF வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, படேடா கிராமத்திற்கு சென்றபோது அங்கு கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடிப்பதாக கிராம மக்கள் கூறி உள்ளனர்.
உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கும் வல்லுநர்களுடன் அங்கு விரைந்த CRPF வீரர்கள், அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால், அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல சாலை வசதி எதுவும் இல்லை. எனவே, அந்தப் பெண்ணை கட்டிலில் அமர வைத்து, அந்த கட்டிலில் கயிறு கட்டி தொட்டில் போன்று சுமந்து சென்றனர்.
காட்டுப்பகுதியில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து சென்றதும், பிரதான சாலையை அடைந்தனர். அதன்பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் பிஜப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர். உரிய நேரத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் செய்த இந்த உதவிக்கு அந்த பெண்ணின் உறவினர்களும் பொதுமக்களும் நன்றி கூறி பாராட்டினர்.