ராஜீவ் காந்தி கொலை பற்றி 5 ஆண்டுக்கு முன்பே கணித்த சிஐஏ
ராஜீவ் காந்தியின் கொலையை பற்றி சிஐஏ 5 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1986-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ராஜீவுக்குப் பிறகு இந்தியா என்று தொடங்கும் தலைப்பில் 23 பக்க அறிக்கையை சிஐஏ தயாரித்து இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையின் முதல் வரியில்:- பதவிக் காலம் முடிவடைவதற்குள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. எனினும், அதன் பிறகு இடம்பெற்ற வாசகங்களில், ராஜீவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த அறிக்கையின் முதல் பகுதியில் ராஜீவுக்குப் பிறகு திடீரென தலைமையில் மாற்றம் ஏற்பட்டால் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியலில் எத்தகைய மாற்றம் ஏற்படும் மேலும் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் அண்டை நாடுகளுடனான இந்திய அரசின் உறவு எப்படி இருக்கும் என அலசப்பட்டுள்ளது.
ராஜீவுக்குப் பிறகு பி.வி.நரசிம்ம ராவ் அல்லது வி.பி. சிங் இடைக்கலா பிரதமராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படியே 1991-ல் நரசிம்ம ராவ் பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
படுகொலை அச்சுறுத்தல் என்ற பகுதியில், பல்வேறு தீவிரவாத குழுக்களால் ராஜீவ் உயிருக்கு ஆபத்து உள்ளது என கூறப்பட்டுள்ளது. சீக்கியரோ அல்லது காஷ்மீர் முஸ்லிமோ ராஜீவை கொலை செய்தால், வட இந்தியாவில் ராணுவம், துணை ராணுவத்தை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தினாலும் மத வன்முறை பெரிய அளவில் வெடிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.