என்எஸ்ஜி கூட்டம் நிறைவு: வாய்ப்பை இழந்தது இந்தியா
சீனாவின் தொடர் பிடிவாதத்தால் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக இன்றைய முக்கிய கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை.
48 உறுப்பு நாடுகள் கொண்ட என்.எஸ்.ஜி. கூட்டமைப்பில் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால்கூட புதிதாக விண்ணப்பிப்பவர்கள் உறுப்பினராக முடியாது.அந்த வகையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவியில் ஆரம்பம் முதலே சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இன்றைய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படவில்லை.
இந்தியா போன்ற அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் சேர்க்கக்கூடாது என்பது சீனாவின் நிலைப்பாடு.
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். என்எஸ்ஜி யில் இந்தியாவை உறுப்பினராக சேர்க்க சீனா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த இரு தலைவர்களின் சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடித்தது.பிரதமர் சீனாவிடம் நேரில் கோரிக்கை வைத்தும் அந்நாடு தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொள்ளவில்லை.