அமர்நாத்தில் மேக வெடிப்பு; பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; 5 பேர் பலி
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமர்நாத் புனித யாத்திரை நடைபெறாத நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த 30ம் தேதி தொடங்கியது.
ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமர்நாத் புனித யாத்திரை நடைபெறாத நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த 30ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு அருகே இன்று மேக வெடிப்பு ஏற்பட்டது. மேகம் வெடித்ததால் புனித குகைக்கு அருகில் உள்ள குறைந்தது இரண்டு அன்னதான வழங்கும் முகாம்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து இயற்கை பாதிப்புகளை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கனமழைக்குப் பிறகு மாலை 5.30 மணியளவில் குகைப் பகுதியில் மேக வெடிப்பு தாக்கியது. முன்னதாக, மோசமான வானிலை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. முன்பதிவு செய்துள்ள பக்தர்கள், அடிவாரத்தில் உள்ள முகாம்களில் தங்ககி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஜம்மு பகுதியில் பெய்யும் கனமழையால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மலைப் பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இதுவரை, ஒரு லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள், பனி சிவலிங்கத்தைக் கொண்ட குகைக் கோயிலில் பிரார்த்தனை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரக்ஷா பந்தன் அன்று ஆகஸ்ட் 11ம் தேதி யாத்திரை முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.