கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் திங்கள்கிழமை இரவு மார்பு வலி காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து சிவகுமாரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், முன்னாள் மாநில அமைச்சர் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதிலிருந்து பல நிகழ்வுகளில் தொடர்ச்சியாக பங்கேற்றார், இது அவரது உடல்நலத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய காலங்களில், அவர் மார்பு மற்றும் முதுகுவலி குறித்து பல சந்தர்ப்பங்களில் அவதிப்பட்டு வந்தார் என குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக கடந்த நவம்பர் 1-ஆம் தேதி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவின் மாறுபாடுகளைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



முன்னாள் மாநில அமைச்சரும், கனகாபுரா சட்டமன்ற பிரிவு சட்டமன்ற உறுப்பினருமான சிவக்குமார் பண மோசடி வழக்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி புதுடெல்லியில் கைது செய்யப்பட்டார். பின்னர் டெல்லி உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து அக்டோபர் 23-ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் இருக்கும் அவர் தற்போது உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு கர்நாடகாவின் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு எனச் சுமார் 84 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சிவக்குமாருக்குச் சொந்தமான வீட்டிலிருந்து ரூ.8.59 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியது. ’இது காங்கிரஸ் மேலிடத்துக்குக் கொடுப்பதற்காக சிவக்குமார் அனுப்பிய ஹவாலா பணம்’ என்று அப்போது டி.கே.சிவக்குமாரின் உதவியாளர்கள் கூறியதாகத் தகவல் வெளியானது.


இது குறித்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த பிப்ரவரி மாதம் சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவக்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் சில நாள்களாக டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.