மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரசுக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ நிர்மலா கவித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிர்மலா கவித், சிவசேனா கட்சியில் இணைய உள்ளார். இவர் நாசிக் மாவட்டத்தில் உள்ள இகத்புரி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணிக்ராவ் கவித்தின் மகள் தான் நிர்மலா கவித். மணிக்ராவ் கவித் கடந்த 1980 முதல் 2014 வரை இடைப்பட்ட காலத்தில் ஒன்பது முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நாளை (புதன்கிழமை) நண்பகல் 12 மணிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் நிர்மலா கவித் சிவசேனா கட்சியில் முறையாக இணைய உள்ளார். முன்னதாக, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணா விகே பாட்டீல் காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளார். அப்துல் சத்தரும் காங்கிரஸை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது நிர்மலா கவித் வெளியேறி உள்ளார். இது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


மகாராஷ்டிரா தேர்தல்கள் 2019 இறுதியில் நடைபெற உள்ளன. இந்த முறை பாஜகவும் சிவசேனாவும் ஒன்றாக தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. இதில் பாஜகவுக்கு 122 இடங்கள் கிடைத்தன. சிவசேனாவுக்கு 63 இடங்கள் கிடைத்தன.