ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு என பிரியங்கா காந்தி ட்வீட்!!
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு என பிரியங்கா காந்தி ட்வீட்!!
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், சிவகங்கை மக்களவைத் தொகுதியின் எம்.பியுமான கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ப.சிதம்பரத்திற்கு நேரில் ஆஜராகும்படி இன்று சம்மன் அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், டெல்லி உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த சூழ்நிலையில், ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதால் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், எம்.பி, நிதி மந்திரி, உள்துறை மந்திரியாக நாட்டிற்கு பல ஆண்டுகள் விசுவாசத்துடன சேவை செய்தவர் ப.சிதம்பரம். மத்திய அரசின் தோல்விகளை ப.சிதம்பரம் அச்சமின்றி உண்மையுடன் பேசி வருகிறார்.
அவரை வேட்டையாடத் துடிப்பது வெட்கக்கேடு. எந்த சூழ்நிலையிலும் ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும். உண்மையை வெளிப்படுத்த தொடர்ந்து போராடுவோம். ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை சந்திக்க தயார்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.