புதிடெல்லி: தேசிய தலைநகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கலில் ஏற்படும் குளறுபடிகள் தொடர்பான விஷயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு, ஒரு பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர் ரீ-ஃபில்லிங் பிரிவை கையகப்படுத்த உத்தரவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய தலைநகரில் உள்ள ஒரு பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பும் நிறுவனமான சேத் ஏர், ஆக்ஸிஜனை வழங்கவில்லை என்று மகாராஜா அக்ராசென் மருத்துவமனை மற்றும் மகா துர்கா அறக்கட்டளை மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததை அடுத்து நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்தது.


ஒரு முக்கிய ஆக்ஸிஜன் (Oxygen) நிரப்பும் இடமாக உள்ள சேத் ஏர், 20MT ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால், அது 2.4 MT அளவை மட்டுமே வழங்கி வருகிறது. மருத்துவமனைகளை வெருங்கையுடன் திருப்பி அனுப்பி வருகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆக்ஸிஜன் சப்ளையரை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ஒரே நேரத்தில் பல மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதாக வாதிட்டார். இருப்பினும், இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், நிறுவனம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கறுப்பு சந்தையில் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியது. 


"சேத் ஏர் சப்ளையை திசைதிருப்பி, அவற்றை கறுப்புச் சந்தையில் விற்பனை செய்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று கூறிய உயர் நீதிமன்றம், அந்த ஆக்ஸிஜன் ஆலையை அதன் ஊழியர்களுடன் சேர்த்து தன் அதிகாரத்தின் கீழ் எடுத்துக்கொள்ளுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. 


இது குறித்து மேலும் தெளிவுபடுத்திய டெல்லி உயர் நீதிமன்றம் (High Court), " உங்களால் இதைச் செய்ய முடியாவிட்டால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஆலையை கையகப்படுத்துமாறு நாங்கள் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியது.


ALSO READ: உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அனுமதி அளித்தார் தலைமை நீதிபதி


டெல்லியில் கோவிட் நெருக்கடி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், சிலிண்டர் மறு நிரப்பிகளுக்கு (Re-filling) கணிசமான அளவு ஆக்ஸிஜன் வழங்கப்படுவதாகவும், ஆனால் மறு நிரப்பிகளில் இருந்து விநியோகத்தை கண்காணிக்க எந்த வழிமுறையும் இல்லை என்றும் குறிப்பிட்டது.


நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற பெஞ்ச், தில்லி அரசு திரவ ஆக்ஸிஜனை மட்டுமல்லாமல் ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் விநியோகிப்பது தொடர்பான தனது நடவடிக்கைகளை இன்னும் முடுக்கி விட வேண்டும் என்று கூறியது. "ஆக்ஸிஜன் நிரப்பும் நிறுவனங்கள் மருத்துவமனைகள் அல்லது தனிநபர்களுக்கு ஆக்ஸிஜனை எவ்வாறு வழங்குகிறார்கள் என்பதில் எந்த சரியான வழிமுறையும் இல்லை. இது ஒரு செயற்கை கறுப்புச் சந்தைக்கு வழிவகுக்கிறது" என்று பெஞ்ச் கூறியது.


கறுப்புச் சந்தை மீது அதிரடி நடவடிக்கை


ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளான ரெம்டெசிவிர் (Remdesivir), டெக்ஸாமெதாசோன் மற்றும் ஃபாபிஃப்லு போன்றவற்றைக் கறுப்பு சந்தையில் விற்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது. 


இந்த மருந்துகள் விற்பனை தொடர்பான அனைத்து மருந்தகங்களிடமிருந்தும் பதிவுகளை எடுத்து, அவை கறுப்புச் சந்தையில் விற்கப்படுகிறதா என்பதைத் தீர்மானிக்க தணிக்கைகளை நடத்துமாறு நீதிமன்றம் மாநில அரசைக் கேட்டுக்கொண்டது.


ஆக்ஸிஜனின் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஆக்ஸிஜன் சப்ளையர்கள், மறு நிரப்பிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எதிராக செயல்பட நீதிமன்றம் டெல்லி அரசுக்கு அதிகாரம் அளித்தது. அனைத்து ஆக்ஸிஜன் சப்ளையர்கள் மற்றும் ரீ-ஃபில்லிங் மையங்கள் தங்களது ஆக்ஸிஜன் சப்ளை குறித்த முழுமையான தரவுகளை டெல்லி அரசுக்கு உடனடியாக வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.


ALSO READ: தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை: நீதிமன்றம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR