ஆட்டோ டிரைவர், தொழிலாளி, தந்தைகள் என டெல்லி கலவரத்தில் பலியானவர்கள் 13 ஆக உயர்ந்தது
டெல்லி வன்முறை காரணமாக இதுவரை இறப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் நிலைமையை என்எஸ்ஏ அஜித் தோவல் மதிப்பாய்வு செய்து வருகிறார்.
புது டெல்லி: டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை பரவியதால் தலைமை கான்ஸ்டபிள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். வடகிழக்கு டெல்லியை ஒட்டியுள்ள மூன்று எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை வரை 13 ஆக உயர்ந்தது. கலவரத்தில் பலியானவர்களில் 22 வயதான ஆட்டோ டிரைவர், தொழிலாளி, தந்தைகள் மற்றும் ஏழைகள் உட்பட பலர் குறிவைக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் சில குடும்பங்கள் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் உரையை தான் வன்முறைக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.
அனைத்து மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. இயல்பான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன என டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜப்ராபாத் மெட்ரோ நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறிவிட்டனர். மவுஜ்பூர் சவுக் பகுதியில் அமைதி திரும்பி வருகிறது என டெல்லி போலீஸ் சிறப்பு ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்தார்.
வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டெல்லியில் அமைதியை மீட்டெடுக்கக் கோரியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு முன்பு ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் பழைய மாணவர் சங்கம் (AAJMI) மற்றும் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு ஆர்ப்பாட்டம் நடத்தியது. அவர்களிடம் போலீசார் பேச்சுவாரத்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
வடகிழக்கு டெல்லியின் பாதுகாப்பு நிலைமையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security Agency) அஜித் தோவல் மதிப்பாய்வு செய்தார். பாதுகாப்பு நிலைமையை குறித்து ஆராய்ந்த பின்னர் என்.எஸ்.ஏ அஜித் அஜித் தோவல், சீலம்பூரில் உள்ள துணை போலீஸ் கமிஷனர் (வடகிழக்கு) அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.