கைதுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி போராட்டம்.. மெட்ரோ நிலையம் மூடல்..
Aam Aadmi Protest: அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மியின் மாபெரும் போராட்டம். டெல்லி ஐடிஓ மெட்ரோ நிலையம் மூடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
Arvind Kejriwal, Delhi: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபானக் காலால் கொள்கை தொடர்பான வழக்கில் நேற்று (மார்ச் 21) இரவு அமலாக்க இயக்குனரகம் (ED) கைது செய்தது. இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை ஆஜர்படுத்துகிறது. மறுபுறம், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு மற்றும் பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். ஆர்ப்பாட்டம் நடத்திய டெல்லி அமைச்சர்கள் பலர் கைது.
டெல்லி ITO மெட்ரோ நிலையம் மூடப்பட்டது
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ததை அடுத்து ஆம் ஆத்மி கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைக்கருத்தில் கொண்டு, டெல்லி ஐடிஓ மெட்ரோ நிலையம் இன்று நாள் முழுவதும் மூடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. ஒருவேளை போராட்டம் நடந்தால், அதனைக் கட்டுப்படுத்த அதிரடி படை பிரிவு துணை ராணுவத்தினர் (RAF) குவிக்கப்பட்டு உள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விசாரணை
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உடனடியாக விசாரிக்கக் கோரி கெஜ்ரிவால் வழக்கறிஞர் குழு நேற்று இரவே மனு தாக்கல் செய்தது. இந்தநிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு எதிராக மனுவை வாபஸ் பெற்றார். கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவெடுத்துள்ளதால், உச்சநீதிமன்றத்திலிருந்து மனுவை வாபஸ் பெற்றார்.
பாஜகவை சூழ்ந்தன எதிர்க்கட்சிகள்
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சிகள் பாஜகவை முற்றுகையிட்டுள்ளன. அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். பல கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க - டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு... சிறையில் இருக்கும் ‘டாப்’ தலைவர்கள்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது சட்டவிரோதமானது -அமைச்சர் அதிஷி
ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கூறுகையில், "டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சட்டவிரோதமாக கைது செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும். சுப்ரீம் கோர்ட் ஜனநாயகத்தை பாதுகாக்கும் என நம்புகிறோம்" என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இது ஜனநாயக படுகொலை -ஆம் ஆத்மி
இது குறித்து ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் கோபால் ராய் கூறுகையில், "இது டெல்லி முதல்வரின் கைது நடவடிக்கை மட்டுமில்ல, டெல்லியில் வசிக்கும் 2 கோடி மக்களை கைது செய்தது போன்றது, இது ஜனநாயக படுகொலை" என்று கூறியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது..
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில், "மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, தோல்வியின் பயத்தால் உந்தப்பட்டு, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் பாசிச பாஜக அரசு வெறுக்கத்தக்க செயலை காட்டுகிறது. அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் சீரழிவு போன்றவற்றை அம்பலப்படுத்தி, ஒரு பாஜக தலைவர் கூட விசாரணையையோ அல்லது கைது செய்வதையோ எதிர்கொள்வதில்லை. பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை இடைவிடாமல் துன்புறுத்துவது ஒரு அவநம்பிக்கையான சூனிய வேட்டையை காட்டுகிறது. இந்த கொடுங்கோன்மை பொதுமக்களின் கோபத்தை தூண்டுகிறது, பாஜகவின் உண்மையான நிறத்தை வெளிக்கொணர்கிறது. ஆனால் அவர்களின் வீண் கைதுகள் நமது உறுதியை அதிகரித்து, இந்திய கூட்டணியின் வெற்றிப் பயணத்தை பலப்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து பிரியங்கா காந்தி கூறியது..
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையி, "தேர்தல் காரணமாக டெல்லி முதல்வர் ஸ்ரீ அரவிந்த் கெஜ்ரிவாலை இவ்வாறு குறிவைப்பது முற்றிலும் தவறானது மற்றும் இது அரசியலமைப்புக்கு எதிரானது" என்று கிகூறியுள்ளார்.
மேலும் படிக்க - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது... அமலாக்கத்துறை அதிரடி - அடுத்தது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து தேஜஸ்வி யாதவ் கூறியது..
அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் (Tejashwi Yadav) கூறுகையில், "ஜனநாயக முறையில் எதிர்க்கட்சிகளை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, புலனாய்வு அமைப்புகள் மற்றும் பிற அரசியலமைப்பு அமைப்புகளின் திரைமறைவின் கீழ், அவர்களின் உதவியுடன் தேர்தலை எதிர்கொள்ள பாஜக விரும்புகிறது என்பது அரவிந்த் கெஜ்ரிவால் ஜியின் கைதின் மூலம் தெளிவாகிறது" என்று கூறியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தினருடன் பேசிய ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கெஜ்ரிவால் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசினார். கெஜ்ரிவாலின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக ராகுல் உறுதியளித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று கெஜ்ரிவால் அல்லது அவரது குடும்பத்தினரை ராகுல் சந்திக்கலாம் எனத் தெரிகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் கைது செய்யப்பட்டார்?
டெல்லி அரசு 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் தனியார் நிறுவனங்களுக்கு மதுபான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. டெல்லி அரசு மதுபான நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்று பலனடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சமீர் மகேந்திருடன் கெஜ்ரிவால் வீடியோ அழைப்பில் பேசியதாக ED குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது. இதில் அவர் குற்றம் சாட்டப்பட்ட விஜய் நாயரை தனது நண்பர் என வர்ணித்திருந்தார். விஜய் நாயர் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - 'இந்திய வரலாற்றில் இது முதல்முறை...' முதல்வராக நீடிப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ