விதிமுறைகள் தளர்வு: ஏடிஎம் மையங்களில் ரூ 2500 எடுக்கலாம்!!
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
மத்திய நிதித்துறை அமைச்சகம் வங்கிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏடிஎம் மூலம் ஒரு நாளைக்கு எடுக்கும் பணத்தின் உச்சவரம்பை ரூ. 2500 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதேபோல தனி நபருக்கு ரூ. 4000 வரை பண மாற்றம் செய்யலாம் என்று இருந்ததையும் ரூ. 4500 உயர்த்தியுள்ளது. மத்திய நிதியமைச்சகம்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமையிலிருந்து அனைத்து ஏடிஎம் மையங்களிலிருந்தும் ரூ.2,500 ரூபாயை வாடிக்கையாளர்கள் எடுத்துக் கொள்ளலாம். வங்கிக் கணக்குகளில் இருந்து வாரத்துக்கு இனி ரூ.24,000 வரை வாடிக்கையாளர்களால் எடுத்துக் கொள்ள முடியும். தினமும் அதிகபட்சமாக ரூ.10,000 வரை மட்டுமே ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற முடியும் என்று விதிமுறை இருந்தது. அந்த விதிமுறையும் நேற்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) நீக்கப்பட்டுவிட்டது.
மூத்த குடிமகன்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தனியாக வரிசை ஏற்படுத்த வேண்டும் என்றும் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.