வாக்குப்பதிவு இயந்திர சவாலை ஜூன் 3 நிரூபிக்க தயார்: தேர்தல் ஆணையம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீதான புகாரை வரும் ஜூன் 3-ம் தேதி முதல் நிரூபிக்கலாம் என தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியும் என்று ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்து இருந்தனர். இந்த புகாரை தொடர்ந்தது தேர்தல் ஆணையம் இந்தச் சவாலை விடுத்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி பேசுகையில்:-
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியோர், இதுவரையிலும் தங்களது புகாரை நிரூபிப்பதற்கான ஆவணத்தையோ அல்லது நம்பகமான ஆதாரத்தையோ தாக்கல் செய்யவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருக்கும் இன்டர்னல் சர்க்யூட் வசதியை மாற்றுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். நமது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் முறைகேடுகள் செய்ய முடியாது.
தேர்தல் நடைமுறையை மேம்படுத்துவதற்கான பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அதேநேரத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான புகாரை நிரூபிப்பதற்கான சவால் வரும் ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தில், இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட தலா 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும். சவாலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள், மேற்கண்ட இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும்.
வாக்குச்சீட்டு அடிப்படையிலான தேர்தலுக்கு அவசியமில்லை: வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்தும் நடைமுறைக்கு மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான அரசியல் கட்சிகள், வாக்குகளை சரிபார்க்கும் துண்டுச்சீட்டு வசதியுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்று நஸீம் ஜைதி தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் சவாலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தலா 3 பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்கலாம். அவர்கள் அனைவரும், இந்திய குடிமக்களாக இருத்தல் வேண்டும். சவாலில் பங்கேற்க விரும்பும் அரசியல் கட்சிகள் தங்களது பெயரை வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் உறுதி செய்ய வேண்டும்.
சவாலுக்கான கால அவகாசம் 4 முதல் 5 நாள்கள் வரை இருக்கலாம். ஆனால், அரசியல் கட்சிகளிடம் இருந்து வரும் பதிலை அடிப்படையாக வைத்து, எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து இறுதி செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜகவுக்கு சாதகமாக முறைகேடுகள் செய்யப்பட்டதாக பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார்கள் தெரிவித்தன.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு அடிப்படையில் இனி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அக்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
அதேநேரத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் திட்டவட்டமாக மறுத்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான புகாரை முடிந்தால் நிரூபிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சவால் விடுத்திருந்தது. இதுதொடர்பான தேதி பிறகு வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, புகாரை நிரூபிப்பதற்கான தேதியை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2009-ம் ஆண்டிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக புகார் எழுந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சவால் விடுத்த போது முறைகேடுகள் செய்ய முடியும் என்று யாராலும் நிரூபிக்க முடியவில்லை.