மிஷன் சக்தி திட்டம் குறித்து பிரதமர் மோடி ஆற்றிய உரை தேர்தல் விதிமீறலா என்று ஆராய தனிக்குழுவை ஒன்றூ தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டு மக்களுக்கு மிக முக்கிய உரையாற்றப் போவதாக தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 300 கிமீ தொலைவில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் விண்வெளியில் உள்ள செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியது என அறிவித்து உரையாற்றினார்.


மோடியின் உரைக்கு முன்னதாக, பிரதமர் மோடி தனது டவிட்டர் பக்கத்தில் "இன்று நண்பகல் 11.45 முதல் 12  மணிக்குள் முக்கியத் தகவலுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளேன். தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் பாருங்கள்" என்று தனது ட்விட்டரில் பதிவு செய்தார். இது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.



இதனையடுத்து, நேரலையில் பேசிய மோடி, "விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. மிஷன் சக்தி என்று இந்த ஆப்ரேஷனுக்கு பெயரிடப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.


அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள ஒரு சோதனை முயற்சியாகும்.


வெறும் 3 நிமிடங்களில் மிஷன் சக்தி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் செயற்கைக்கோள்களைக் காக்கும் முயற்சியே தவிர மற்ற நாடுகளுக்கு எதிரான தாக்குதல் இல்லை, மிஷன் சக்தி நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.


அவரின் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சூழலில் எதிர்க்கட்சி தலைவர்கள் விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சாதனைக்கு பிரதமர் மோடி உரிமை கோருவதாக கண்டனம் தெரிவித்தனர்.


திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி  உள்ளிட்ட கட்சிகளும் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. 


தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்பை ஒரு பிரதமர் வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாகும். எனவே இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டது.


இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக அதிகாரிகளை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.