கெஜ்ரிவால் மீது தேர்தல் ஆணையம் எப்.ஐ.ஆர் பதிவு
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என்று மக்களிடம் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி: ஓட்டுக்கு பணம் கொடுத்தால் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என்று மக்களிடம் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அர்விந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் மற்றும் பா.ஜக., வேட்பாளர்கள் பணம் கொடுத்தால், மறுக்காமல் வாங்கி கொண்டு ஆம் ஆத்மிக்கு ஓட்டுப்போடுங்கள் எனக்கூறினார்.
இது பற்றி வந்த புகார்களை விசாரித்த, தேர்தல் கமிஷன், 21-ம் தேதி அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பிய கடிதத்தில் இது போன்று தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் எதிர் காலத்தில் நீங்கள் பேசினால், தேர்தல் கமிஷன், உங்கள் மீதும் உங்கள் கட்சியின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும். மேலும் உங்கள் கட்சி அங்கீகாரம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில், 'ஓட்டுக்கு பணம் வாங்குங்கள் என்ற கோஷத்தை அனுமதிக்க வேண்டும்' என்றும் இதன் மூலம் தேர்தலில் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அர்விந்த் கெஜ்ரிவால் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.