முறைகேடாக சொத்து குவித்ததாக கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரின் மகள் ஐஷ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


இந்த சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. வருமான வரித்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிக்கிய ரூ.8.50 கோடி குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது.


இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். சிவகுமாரிடம் அமலாக்கத்துறை நான்கு நாட்கள் விசாரணை நடத்தியநிலையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டி.கே. சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனர். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.


சுமார் 600 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியான சிவக்குமார் அவரது மகள் ஐஷ்வர்யா பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கியதாகவும் பெருமளவு பணத்தை முதலீடுகளில் குவித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வரும்12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவக்குமாரின் மகள் ஐஷ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அளித்துள்ளது.


பெங்களூரு சதாசிவம் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற அமலாக்கத்துறை இந்த சம்மனை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.