பிப்., 24 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும்: EPS
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம்
தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி!!
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பிப்ரவரி 24 ஆம் தேதி அதிமுக சார்பில் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அப்பொழுது முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் ,ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 24-ஆம் தேதியை மாநில பெண்குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. அதில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதன்படி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், அரசு இல்லங்களில் வாழும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும்போது ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், ஹஜ் பயணிகள் தங்கி செல்வதற்காக அவர்களுக்கு 15 கோடி ரூபாய் செலவில் புதிய ஹஜ் இல்லம் அமைக்கப்படும். உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.1500-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தப்படுவதாகவும், உலமாக்களுக்கு வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி ஒதுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.