அசாம், பிஹார் வெள்ளம்: பலி எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு
கடந்த சில நாட்களாக அசாம் மற்றும் பிஹார் மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பிஹார் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் 10 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பிரம்மபுத்திரா நதியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தது. கசிரங்கா தேசிய பூங்காவின் 80 சதவீத பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. முக்கிய சாலைகளில் தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டது. தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மணாலியிலிருந்து திபெத்துக்கு செல்லும் தேசிய சாலைகள் பாதிக்கப்பட்டது.
அசாம் மற்றும் பிஹாரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 90 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநிலங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பெரு வெள்ளத்திற்கு அசாமின் தேசிய வனவிலங்கு சரணலாயத்திலிருந்த 17 அரிய வகை காண்டமிருகங்கள் இறந்ததாக அசாம் மாநிலத்தின் வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சர் பிரமிளா ராணி கூறினார்.
பிஹாரை பொருத்தவரை 260,000 பேர் வெள்ளத்துக்கு பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அசாமில் ஏறக்குறைய 30 லட்சம் பேர் இந்த வெள்ளத்தில் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர். அவர்களில் 7 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி நடவடிக்கைகள் துரித வேகத்தில் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.