நான்கு தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் பிரிந்து பாஜகவுடன் இணைகிறார்கள்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்யசபா எம்.பிக்கள் 4 பேர் இன்று பாஜகவில் சேர உள்ளதாக அறிவித்ததுடன், தங்களது ராஜினாமா கடிதத்தை துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் அளித்துள்ளனர். 


நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் BJP பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்துள்ளது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது.  மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் ஆகிய இரண்டிலுமே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 


இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியினர் சிலரே சந்திரபாபு நாயுடு மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்த சூழ்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்யசபா எம்.பிக்கள் வெங்கடேஷ், ரமேஷ், சீதாராம லட்சுமி, சுஜானா சவுத்ரி ஆகிய 4 பேர் பாஜகவில் சேர உள்ளதாக இன்று காலை உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருந்தன. 


இதைத் தொடர்ந்து, டி.ஜி.வெங்கடேஷ், சி.எம்.ரமேஷ், ஒய்.எஸ்.சவுத்ரி, கரிக்கபோதி மோகன் ராவ் ஆகிய நான்கு ராஜ்யசபா எம்.பிக்கள் இன்று தங்களது ராஜினாமா கடிதத்தை துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் அளித்தனர். மேலும், தாங்கள் பாஜகவில் இணையவுள்ளதாக அவர்கள் காரணம் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வின் போது ஜே .பி.நட்டா உடன் இருந்தார். எம்.பிக்கள் இணைந்தது மூலம் பாஜக எம்.பிக்கள் பலம் ராஜ்யசபாவில் 104 லிருந்து 108 ஆக உயர்ந்துள்ளது.


ஜே.பி. நட்டா பாஜக தேசிய செயல் தலைவராக பதவியேற்ற மூன்றாவது நாளில் தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்யசபா எம்.பிக்கள் 4 பேர் பாஜகவில் இணைந்தது அவரின் அதிரடி செயலாகவே பார்க்கப்படுகிறது.