மும்பை விமான டிக்கெட் ரத்து செய்தால் முழு பணமும் திரும்ப தரப்படும்: GoAir
பலத்த மழை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
புதுடெல்லி: தொடர்ந்து பெய்த கனமழையால் மும்பை நகரமே நீரில் மூழ்கியுள்ளது. சாலைகளில் பல அடி உயரத்துக்கு நீர் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக அனைத்து போக்குவரத்து வழிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நீர் அதிக அளவில் தேங்கி உள்ளதால் மும்பை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து புறப்படும் மற்றும் தரையிறக்கப்படும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. ஓடுபாதையில் விமானம் நழுவி விபத்து ஏற்ப்படாமல் இருக்க மும்பை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கோ ஏர் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில், மும்பையில் இருந்து புறப்பட்டு அல்லது வந்து சேரும் விமானத்திற்கான டிக்கெட்டை மறு திட்டமிடல் அல்லது ரத்து செய்யும் பட்சத்தில், பயணிகளுக்கு முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். எந்தவித பணமும் பிடித்தம் செய்யப்படாது. இந்த அறிவிப்பு ஜூலை 3 வரை மட்டுமே என்று அறிவிகப்பட்டு உள்ளது. ஒரு ஹெல்ப்லைன் எண்ணும் (18602 100 999) வெளியிடப்பட்டுள்ளது.
பல விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. விமானத்தின் நிலை என்ன என்பதை அறிய, எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். G8 என தட்டச்சு செய்து இடைவெளி கொடுத்த பிறகு, விமான டிக்கெட் எண்ணை நிரப்பி 57333 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பலத்த மழை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.