புதுடெல்லி: 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் தங்கள் கைவசம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று பிரதமர் மோடி கூறினார்.


செல்லாத நோட்டுகளை மக்கள் தங்கள் வங்கி கணக்கில் டிசம்பர் 30-ம் தேதி வரை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இருந்தால் அவற்றை மார்ச் மாதம் வரை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.


செல்லாத 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அரசு ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பால் அங்காடி, நுகர்வோர் கூட்டுறவு கடைகள், தகன மேடை, ரெயில் டிக்கெட்டுகள், மெட்ரோ டிக்கெட்டுகள், அரசு பஸ் போக்குவரத்து, விமான டிக்கெட், மின்சாரம், குடிநீர் வரி, சமையல் கியாஸ் சிலிண்டர், புராதன இடங்களுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுக்கு டிசம்பர் 15-ம் தேதி வரை நீடித்தது என்று மத்திய அரசு நேற்று  உத்தரவிட்டுள்ளது.


மேலும் மத்திய, மாநில அரசுகளின் கூட்டுறவு பண்டக விற்பனை சாலைகளில் ஒரு முறை ரூ.5,000 வரை பொருள்கள் வாங்கலாம். ரூ.500 வரையிலான செல்லிடப்பேசி ரீசார்ஜ் செய்வதற்கும் பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.


மத்திய, மாநில அரசுகள், மாநகராட்சி, நகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ரூ.2,000 வரை கட்டணம் செலுத்துவதற்கு பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.


பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதால், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த 11-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி அறிவித்தார்.


அதன்பிறகும் பணப்புழக்கம் சீரடையாததால் சுங்க கட்டண ரத்து சலுகை வருகிற டிசம்பர் 2-ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்தார்.


டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மூலம் சுங்க கட்டணம் செலுத்த வசதியாக நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் உதவிகளுடன் சுவைப் மெஷின் வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.