நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்படுகிறது. ஜூலை 1-ம் தேதி முதல், இதை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

4 வகையான வரி விகிதங்கள்


பொருட்கள் மீது 5%, 12%, 18%, 28% என 4 வகையான ஜிஎஸ் வரி விகிதங்களை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் தொடங்கியது.


அதில், 6 பொருட்களை தவிர, 1,205 பொருட்களுக் கான வரி விகிதம் முடிவு செய்யப்பட்டது.


இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 2-ம் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சேவைகள் மற்றும் சில பொருட்களுக்கான வரி விகிதம் இறுதி செய்யப்பட்டது. 


* பொருட்களுக்கான வரி விகிதம் போலவே, சேவைகளுக்கான வரி விகிதமும் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதமாக இருக்கும்.


* ரூ.50 லட்சம் மற்றும் அதற்கு கீழ் விற்றுமுதல் கொண்ட உணவகங்களுக்கு 5 சதவீத வரி.


ஓட்டல், லாட்ஜ்


* ஏ.சி. உணவகங்கள், மதுபான உரிமம் பெற்ற உணவகங்களில் உணவு கட்டணம் மீது 18 சதவீத வரி. ஏ.சி. அல்லாத உணவகங்களுக்கு 12 சதவீத வரி. ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு 28 சதவீத வரி.


* ஆயிரம் ரூபாய்க்குள் நாள் வாடகை கொண்ட ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களுக்கு வரி விலக்கு. ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை நாள் வாடகை கொண்டவற்றுக்கு 12 சதவீத வரி. ரூ.2,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை நாள் வாடகை கொண்டவற்றுக்கு 18 சதவீத வரி. ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வாடகை கொண்டவற்றுக்கு 28 சதவீத வரி.


* தொலைத்தொடர்பு, நிதி சேவைகளுக்கு 18 சதவீத வரி. குதிரை பந்தயம், தியேட்டர்களுக்கு கேளிக்கை வரியும், சேவை வரியும் ஒருங்கிணைக் கப்பட்டு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்.


கல்வி, சுகாதாரத்துக்கு வரி விலக்கு


* ஓலா, உபேர் போன்ற போக்குவரத்து சேவைகளுக்கு 5 சதவீத வரி.


* வெள்ளை அடித்தல் போன்ற பணி ஒப்பந்தங்களுக்கு 12 சதவீத வரி.


* கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு. இதனால், இவற்றின் கட்டணங்கள் குறையும்.


* அனைத்து கார், பஸ், சரக்கு வாகனம் (டிரக்), மோட்டார் சைக்கிள், மொபட், தனிநபர் விமானம், உல்லாச படகு ஆகியவற்றுக்கு அதிகபட்ச வரி விகிதமான 28 சதவீத வரி. இவற்றின் மீது கூடுதல் வரியும் விதிக்கப்படுவதால், இப் பொருட்களின் விலை உயரும்.


கார், மோட்டார் சைக்கிள்


* 350 சிசி திறனுக்கு மேற்பட்ட என்ஜின் கொண்ட மோட்டார் சைக்கிள் மற்றும் தனிநபர் விமானம், உல்லாச படகு மீது 3 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதால், இவற்றின் மீதான மொத்த வரி விகிதம் 31 சதவீதமாக இருக்கும்.


* 1,200 சிசி வரை திறன் கொண்ட சிறியரக பெட்ரோல் கார்கள் மீது ஒரு சதவீத கூடுதல் வரி.


* 1,500 சிசி வரை திறன் கொண்ட சிறியரக டீசல் கார்கள் மீது 3 சதவீத கூடுதல் வரி.


* நடுத்தர அளவு கார்கள், எஸ்.யு.வி. ரக கார்கள், சொகுசு கார்கள் மீது 15 சதவீத கூடுதல் வரி. 10 பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடிய வேன், பஸ்கள் மற்றும் 1,500 சிசிக்கு மேல் திறன் கொண்ட கார்களுக்கும் 15 சதவீத கூடுதல் வரி.


* செயற்கை குளிர்பானங் கள், எலுமிச்சை சாறு பானம் மீது 12 சதவீத கூடுதல் வரி.


பான் மசாலா, சிகரெட்


* பான் மசாலா குட்கா மீது 204 சதவீத கூடுதல் வரி. நறுமண புகையிலை, வடிகட்டிய புகையிலை மீது 160 சதவீத கூடுதல் வரி.


* 65 மி.மீட்டருக்கு மிகாத பில்டர் மற்றும் பில்டர் அல்லாத சிகரெட்டுகளுக்கான வரி, ஆயிரம் சிகரெட்டுக்கு ரூ.1,591 ஆக இருக்கும். அதன் மீது 5 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்படும்.


65 மி.மீட்டருக்கு மேற்பட்ட பில்டர் சிகரெட் மீதான வரி, ஆயிரம் சிகரெட்டுக்கு ரூ.2,126. அத்துடன் 5 சதவீத கூடுதல் வரி. 65 மி.மீட்டருக்கு மேற்பட்ட பில்டர் அல்லாத சிகரெட் மீதான வரி, ஆயிரம் சிகரெட்டுக்கு ரூ.2,876. அத்துடன் 5 சதவீத கூடுதல் வரி.


* சுருட்டுகள் மீதான வரி, ஆயிரம் சுருட்டுக்கு ரூ.4,170 அல்லது 21 சதவீத கூடுதல் வரி, இவற்றில் எது அதிகமோ அது விதிக்கப்படும். கம்பெனி குட்கா மீதான கூடுதல் வரி 72 சதவீதம் ஆகும்.


இதனால் புகையிலை பொருட்கள், சிகரெட் ஆகியவற்றின் விலை உயரும்.


* நிலக்கரி, பழுப்பு நிலக்கரி மீது டன்னுக்கு ரூ.400 என்ற வீதத்தில் தூய்மையான எரிசக்தி வரி விதிக்கப்படும்.


ரயில், விமானம்


* ஏ.சி. வசதி ரயில் பெட்டி பயணத்துக்கு 5% வரி. ஏ.சி. அல்லாத ரயில் பயணத்துக்கு வரி விலக்கு.


* மெட்ரோ, புறநகர் ரயில் மற்றும் ஹஜ் உள்ளிட்ட மத பயணங்களுக்கு வரி விலக்கு.


* விமானத்தில் சாதாரண வகுப்பு பயணத்துக்கு 5% வரி. உயர் வகுப்பு பயணத்துக்கு 12% வரி.


* லாட்டரி மீது வரி கிடையாது.


மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்து கூறியதாவது:-


சேவைகளுக்கு எவ்வளவு வரி என்பதுதான் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. எல்லா சேவைகளுக்கும், பொருட்களுக்கும் ஏற்கனவே இருந்ததை விட குறைவான வரி விகிதமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இது நுகர்வோருக்கு சாதகமான வரி.


தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் மற்றும் பீடிக்கு எத்தனை சதவீத வரி விதிப்பது என்று ஜூன் 3-ந் தேதி நடைபெறும் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.


இவ்வாறு கூறினார்.