இமாச்சல பிரதேச அரசியல் குழப்பங்களின் உச்சகட்டம்! முதல்வர் சுக்விந்தர் சிங் ராஜினாமா பின்னணி!
Himachal Pradesh Political Turmoil : தேர்தலுக்கு முன் சிக்கலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்... இமாச்சல பிரதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையில், மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்
புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையில், மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். முதல்வர் சுகு ராஜினாமா செய்யக் கோரி ஏராளமான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட நிலையில் இந்த ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தங்கள் அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக முதல்வர் சுகுவை பதவி விலகுமாறு காங்கிரஸ் உயர்மட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சி மாறி வாக்களிப்பு
இமாச்சல் மாநிலத்தில் உள்ள ஒற்றை மாநிலங்களவை தொகுதிக்கான தேர்தலில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி மாறி வாக்களித்ததை அடுத்து, பனிமலை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் அரசியல் சுனாமி வீசுகிறது. பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ஆறு எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்ததை அடுத்து, காங்கிரஸ் தலைமை கடும் நடவடிக்கையில் இறங்கியது.
15 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்
இதனிடையில், சட்டசபை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியாவின் அறையில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்ற சபாநாயகர் பாஜகவின் 15 எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்
ஜெய்ராம் தாக்கூர், விபின் பர்மர், ரந்தீர் சர்மா, ஹன்ஸ் ராஜ், வினோத் குமார், ஜனக் ராஜ், பல்பீர் வர்மா, லோகிந்தர் குமார், திரிலோக் ஜம்வால், சுரீந்தர் ஷோரி, பூரன் சந்த், தலிப் தாக்கூர், இந்தர் சிங் காந்தி, ரன்பீர் நிக்கா மற்றும் தீப் ராஜ் என 15 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டதால், அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் மெஜாரிட்டி
இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது எனக் கூறும் பாஜக எம்.எல்.ஏக்கள், மாநில அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான தீர்மானம் என்பது, வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்துவதற்காக பாஜகவினர் இன்று ஆளுநரை சந்தித்தனர். இப்படி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனைஅக்ள் கூடிக் கொண்டே செல்கின்றன.
நெருக்கடிக்கு மத்தியில் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா
இமாச்சலப் பிரதேசத்தில் முதலமைச்சர் ராஜினாமா செய்தார் என்றால், மாநில அமைச்சரும், முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங் தனது பதவியை ராஜினாமா செய்தது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி தலைவர்கள் சிம்லா விரைந்தனர்
இமாச்சல மாநிலத்தில் நிலவும் சிக்கலான சூழ்நிலையை சமாளிக்க, கட்சியின் மூத்த தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோரை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நியமித்துள்ளார், ஆறு எம்.எல்.ஏ.க்கள் இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் செயல்படும் விதத்தில் "ஏமாற்றம்" அடைந்துள்ளதாகவும் அவரை மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு முன் சிக்கலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்
தேர்தல் அறிவிக்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் நெருக்கடியின் எதிரொலி தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், நிலைமையை ஆய்வு செய்ய ஹூடாவும் சிவக்குமாரும் இன்று சிம்லா சென்றுள்ளனர்.
மேலும் படிக்க | அதிமுக கூட்டணி உறுதி எல்லாம் இல்லை - அன்புமணி ராமதாஸ் வைத்த டிவிஸ்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ