தன்பாலின உறவு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்க கலாச்சாரத்தினை இந்தியாவில் புகுத்தும் முயற்சி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் ஓரின சேர்க்கை என்பது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டது. இதனால் ஓரின சேர்க்கை எதிராக சட்டப்பிரிவு 377 உருவாக்கப்பட்டது. இந்த சட்ட பிரிவு படி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும். 


ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஓரின சேர்க்கை அனுமதிக்க வேண்டும் எனவும், பாலியல் உறவு என்பது தனிப்பட்ட மனிதனின் உரிமை. எனவே ஓரின சேர்க்கை எதிரான சட்டப்பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்த சட்டப்பிரிவு நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகளின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. 


இந்நிலையில் இன்று ஓரின சேர்க்கை குற்றமில்லை என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அளித்தது. நாடுமுழுவதிலும் இந்த தீர்ப்பு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இத்தீர்ப்பால் இந்திய கலாச்சாரம் பாதிக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது... 


"ஓரின சேர்க்கை குற்றமில்லை என 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பு எனக்கு வேதனையளிக்கிறது. 7-பேர் கொண்ட அரசியல்சாசன அமர்விடம் இந்த வழக்கை எடுத்து செல்வேன். 



இன்று வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பினால், சமூகத்தில் இனிமேல் குற்றங்கள் அதிகரிக்கும், பாலுறவு மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும். ஓரின சேர்க்கை என்பது என்னை பொறுத்தமட்டில் மரபணு ரீதியிலான குறைபாடு ஆகும்.


இன்றைய தீர்ப்பு ஆனது அமெரிக்க கலாச்சாரத்தினை இந்தியாவில் புகுத்தும் முயற்சியாகும். இந்தியாவில் விரைவில் ஓரின சேர்க்கை விடுதிகளையும், கலாச்சார கூடங்களையும் கொண்டுவரும் முயற்சி. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் ஓரின சேர்க்கை விடுதிகளை உருவாக்க நினைக்கின்றன. இதனால் நாட்டின் பாரம்பரியம் சீரழியும்" என குறிப்பிட்டுள்ளார்!