Tamil Nadu MPs Oath Taking Ceremony: 18ஆவது மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்தது. கடந்த முறை பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையை பெற்றிருந்த நிலையில், இம்முறை 240 தொகுதிகளை மட்டுமே அக்கட்சி வென்றது. தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவின் பேரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஏறியது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை பெற்றார்.
தொடர்ந்து, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல், திமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ள இந்தியா கூட்டணி 230க்கும் மேல் பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. புதிய ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நீட் விவகாரம், மேற்கு வங்கம் ரயில் விபத்து என தொடர் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பியிருந்த நிலையில், நேற்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.
தமிழக எம்.பி.,கள் பதவிப்பிரமாணம்
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பர்த்ருஹரி மஹ்தாப் இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மக்களவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்றும், இன்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்த நிலையில், தமிழ்நாடு உறுப்பினர்கள் இன்று மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் பதவியேற்றுக்கொண்டனர். தமிழக எம்.பி.க்களுக்கு இடைக்கால சபாநாயகராக ராதா மோகன் சிங் பதவியேற்பு செய்துவைத்தார்.
38 பேர் தமிழில் பதவியேற்பு...
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணிதான் கைப்பற்றியிருந்தது. இதை தொடர்ந்து திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான 39 தொகுதிகளின் மக்களவை உறுப்பினர்களும் வரிசைப்படி பதவியேற்றுக்கொண்டனர். கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத் மட்டும் அவரது தாய்மொழி தெலுங்கில் பதவியேற்றுக்கொண்டார், மீதம் உள்ள 38 பேரும் தமிழிலேயே பதவியேற்றுக்கொண்டனர். இதில் முதல் ஆளாக திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் தனது கையில் அரசியலமைப்பு சட்ட புத்தக்கத்துடன் பதவியேற்றார். மேலும், எம்பிக்கள் பதவியேற்கும்போது கையில் அரசியலமைப்புடன் வந்து முழமிட்டபடி சென்றனர்.
'வேண்டாம் நீட்'
அந்த வகையில், வாழிய வையகம், வாழ்க தமிழ்; தலித், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்துக என சசிகாந்த் செந்தில் முழக்கமிட்டார். தொடர்ந்து, திமுக எம்.பி,க்கள் பதவியேற்கும்போது முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை குறிப்பிட்டு முழக்கமிட்டனர். தொடர்ந்து, வடசென்னை திமுக எம்.பி., கலாநிதி வீராசாமி, 'பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்க! திராவிடம் வாழ தளபதி வாழ்க! தமிழ் வெல்க' என முழக்கமிட்டார். தொடர்ந்து தென் சென்னை திமுக எம்பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் முதலமைச்சர் ஸ்டாலினை குறிப்பிட்டு பதவியேற்றார். அடுத்து பதவியேற்க வந்த மத்திய சென்னை திமுக எம்.பி, தயாநிதி மாறன் ஸ்டாலினை மட்டுமின்றி உதயநிதி ஸ்டாலினையும் குறிப்பிட்டு முழுக்கமிட்டார். மேலும், அவர் 'வேண்டாம் நீட், BAN NEET' எனவும் முழக்கமிட்டார்.
தொடர்ந்து திமுக எம்.பி.,க்கள் செல்வம், ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், எம்.டி. செல்வகணபதில உள்ளிட்டோரும் ஸ்டாலின், உதயநிதி வாழ்க என முழக்கமிட்டு பதவியேற்றனர். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி சின்னவர் வாழ்க என குறிப்பிட்டு பேசினார். பின்னர் வந்த திமுக எம்.பி.,கள் சி.என். அண்ணாதுரை, தரணிவேந்தன், மலையரசன் ஆகியோர் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு மட்டுமின்றி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவையும் குறிப்பிட்டு முழக்கமிட்டனர்.
'கடவுள் மீது உளமாற...'
தஞ்சாவூர் எம்.பி முரசொலி ஸ்டாலின், உதயநிதி பெயரை தொடர்ந்து காவேரி நீரை திறந்துவிடும்படி முழக்கமிட்டுச் சென்றார். தொடர்ந்து திமுக எம்.பி.,கள் உளமாற உறுதியேற்கிறேன் என பதவிப் பிரமாணம் செய்த நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் மட்டுமே கடவுள் அறிய என பதவியேற்றுக்கொண்டனர். குறிப்பாக, கார்த்திக் சிதம்பரம், டாக்டர் விஷ்ணுபிரசாத், விஜய் வசந்த் ஆகியோர் கடவுள் அறிய என பதவியேற்றனர். இதில் காங்கிரஸ் உறுப்பினர் சுதா தமிழ் கடவுள் முருகன் மீது உளமாற உறுதிகூறுகிறேன் என சொல்லி பதவியேற்றார். திருமாவளவன் Jai Democracy, Jai Constitution என முழக்கமிட்டார்.
தென்காசி திமுக எம்.பி, ராணி ஸ்ரீகுமார் மட்டும் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி மட்டுமின்றி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், கனிமொழி ஆகியோரை குறிப்பிட்டு முழக்கமிட்டார். தேனி திமுக எம்.பி., தங்க தமிழ்செல்வன் முழக்கமிடாத நிலையில், ஸ்டாலினின் புகைப்படத்தை அவையோருக்கு காட்டினார். கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் வாழ்க மார்க்ஸியம் என பதவியேற்றுக்கொண்டனர். திமுகவின் மூத்த உறுப்பினர்களான டி.ஆர். பாலு, ஆ. ராசா, கனிமொழி ஆகியோர் மட்டும் எவ்வித முழக்கமும் இன்றி பதவியேற்றுக்கொண்டனர்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மெளனம் ஏன்... கார்கேவுக்கு ஜே.பி.நட்டா கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ