’ஹனிமூன் to ஹனுமன் ஹோட்டல்’ டிவிட்டர் பதிவுக்காக முகமது ஜூபைர் கைது - பின்னணி!
ஹனிமூன் to ஹனுமன் ஹோட்டல் என்ற புகைப்படத்தைக் கொண்ட டிவிட்டர் பதிவுக்காக ஆல்ட் நியூஸ் நிறுவனர்களில் ஒருவரான முகமது ஜூபைர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத உணர்வுகளை தூண்டியதாக, இந்து மதத்தை அவமதித்ததாக எழுந்த புகாரில் ஆல்ட் நியூஸ் நிறுவனர்களில் ஒருவரான முகமது ஜூபைர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டது பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட புகாருக்காக விசாரணைக்கு சென்ற அவர், மாலையில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். எந்த வழக்குக்காக கைது செய்யப்பட்டார் என்ற விவரத்தை டெல்லி காவல்துறை தெரிவிக்கவில்லை என ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் பிரதிக் சிங் சின்ஹா இதனை டிவிட்டரில் தெரிவித்தார்.
பின்னர் டெல்லி காவல்துறை கொடுத்த விளக்கத்தில், 2018 ஆம் ஆண்டு முகமது ஜூபைர் பதிவிட்ட டிவிட்டர் பதிவு இந்து மத உணர்வுகளை அவமதிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் இருப்பதாக டிவிட்டர்வாசி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தது. அவர் மீது 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதல் அளித்தல்) மற்றும் 295 (வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் எந்த வகுப்பினரின் மத உணர்வுகளையும் சீற்றம் செய்யும் நோக்கம் கொண்டது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த புகாரில் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் டெல்லி காவல்துறை கூறி, காவலில் எடுத்துள்ளது. புகார் அளித்த டிவிட்டர் யூசர், யார் என்று தெரியவில்லை. அவர் இதுவரை ஒரே ஒரு டிவீட் மட்டுமே செய்திருக்கிறார். அதுவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜூபைர் பதிவு செய்த அந்த டிவீட்டுக்கு டெல்லி போலீஸை டேக் செய்துள்ளார் அந்த அடையாளம் தெரியாத நபர். அக்டோபர் 2021 ஆம் ஆண்டு தான் அந்த அடையாளம் தெரியாத நபர் டிவிட்டர் கணக்கை தொடங்கி, ஜூபைரின் பதிவுக்காக ஒரே ஒரு டிவிட் மட்டுமே போட்டுள்ளார்.
மேலும் படிக்க | நடிகை பாலியல் வன்கொடுமை - தயாரிப்பாளர் கைது
உண்மையில் ஜூபைர் போட்ட டிவிட்டர் பதிவின் புகைப்படம் 1983 ஆம் ஆண்டு ஹிருஷிகேஷ் முகர்ஜி இயக்கிய கிஸ்ஸி சே நா கெஹ்னா என்ற காமெடி படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் இருக்கும் புகைப்படமாகும். அப்போது தணிக்கை வாரியத்தால் முறையாக அனுமதி பெற்று, பின்னர் இந்தியா முழுவதும் உள்ள தொலைக்காட்சிகளில் எண்ணற்ற முறையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் இந்த பதிவுக்காக அவர் கைது செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை கிளப்புவதாகவும், அவர் தனிப்பட்ட முறையில் குறி வைக்கப்படுவதாகவும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
அவர் தனிப்பட்ட முறையில் குறி வைக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆல்ட் நியூஸ் நிறுவனம், தொடர்ச்சியாக வலதுசாரி அமைப்புகளால் பகிரப்படும் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகளை ஆதாரபூர்வமாக பதிவிட்டு வந்தது. குறிப்பாக, முகமது ஜூபைர் அதனை தொடர்ச்சியாக செய்து வந்தார். அண்மையில் நூபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து பேசிய வீடியோ பதிவை முகமது ஜூபைர் டிவிட்டரில் பதிவிட, அது உலக கவனத்தை பெற்றது. அரேபிய நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தன. இது இந்தியாவுக்கு பெரும் சிக்கலை உருவாக்கியது. மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை பாதிக்கும் வகையிலும் அமைந்ததால், உடனடியாக நுபுர் சர்மா மீது பாஜக நடவடிக்கை எடுத்தது.
இதேபோல் இன்னும் சில வலதுசாரி அமைப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையும் உருவானது. சிலர் கைது செய்யப்பட்டு பிணையிலும் உள்ளனர். இதனால், வலதுசாரி அமைப்புகளின் மத்தியில் கடும் கோபத்துக்கு ஆளாகியிருந்தார் முகமது ஜூபைர். இதுதவிர இந்து அமைப்பினர் கடவுளை போற்றும் விதமாக பகிர்ந்த புகைப்படங்கள், பேச்சுகள் ஆகியவற்றை கிண்டல் செய்யும் விதமாக அவர் தொடர்ச்சியாக பதிவுகளை பதிவிட்டு வந்தார்.
குறிப்பாக, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதல் மத்திய அமைச்சர்கள் வரை புராணக் கதைகளை இப்போது நடைபெறும் நிகழ்வுகளுக்கு அப்போதே சான்று இருப்பதாக கூறியதையெல்லாம் மீம் வடிவில் புகைப்படம் உருவாக்கி பதிவிட்டு வந்தார். இவையெல்லாம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்ததால், கடும் அதிருப்தியில் இருக்கும் மத்திய அரசு அவரை பழிவாங்க இத்தகைய கைது நடவடிக்கையை அரங்கேற்றியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR