மக்கள் எப்படி சுவாசிக்கிறார்கள்?, மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஒற்றைப்படை- திட்டம் நிரந்தர தீர்வாக இருக்காது என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: தலைநகர் டெல்லியில் (Delhi Air Pollution) நாளுக்கு நாள் காற்றின் மாசு அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. காற்று மிகவும் மோசமடைந்து ஆபத்து அளவை எட்டி இருக்கிறது. தற்போது டெல்லி (Delhi) மக்கள் காற்றை சுவாசிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லியில் மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை உருவாகி உள்ளது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. 


இந்நிலையில், டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் டெல்லி அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றம் காற்று மாசு குறித்து மத்திய மற்றும் டில்லி அரசுகளுக்கு சரமாரி கேள்வி எழுப்பியதுடன், பல வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவில், டில்லியில் நிலவும் காற்று மாசுபாட்டை சரி செய்ய காற்று சுத்திகரிப்பு கோபுரங்களை அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். டில்லி அரசு கொண்டு வந்த ஒற்றை-இரட்டை இலக்க வாகன இயக்க திட்டத்தால் காற்று மாசுபாட்டில் இருந்து ஏதாவது நிவாரணம் கிடைத்துள்ளதா? என கேள்வி எழுப்பியது.


இது குறித்து டெல்லி அரசு கூறுகையில்; இத்திட்டத்தால் காற்று மாசு 5 முதல் 15 சதவீதம் குறைந்துள்ளது. இது நல்ல தீர்வை தந்துள்ளது. இதில் யாருக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. வேளாண் குப்பைகள் எரிக்கப்படுவதே டில்லி மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டது. மீண்டும் கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், இன்று டில்லியில் காற்றின் தரம் 600 ஐ நெருங்கி உள்ளது. டில்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் எப்படி சுவாசிப்பது? காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ஒற்றை-இரட்டை இலக்க வாகன இயக்கம் தீர்வாகாது என கோபமாக கூறியது.


இது குறித்து கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில்; வானிலை அறிக்கையின்படி டில்லியில் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் காற்றின் தரம் உயரும். அப்படி உயராவிட்டால் ஒற்றை-இரட்டை இலக்க வாகனம் இயக்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக நவம்பர் 18 அன்று முடிவு எடுக்கப்படும் என்றார்.