ஓட்டுநரே இல்லாமல் மாநிலம் டூ மாநிலம் வந்த ரயில்... கடைசியில் நின்றது எப்படி தெரியுமா?
Train Without Driver: ஓட்டுநர்கள் யாரும் இல்லாமல், எந்தவித கட்டுபாடுகளும் இன்றி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் வரை சரக்கு ரயில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Train Without Driver: ஆளில்லாத வாகனங்களை தயாரிப்பதில் உலகில் உள்ள முன்னணி நிறுவனங்களும் தீவிரமாக முயன்று வருகின்றனர். குறிப்பாக, ஆட்டோமேட்டிக் வாகனம் அல்லது ரோபோ மூலம் இயங்கும் கார்கள் தற்போது பல நாடுகளில் சோதனை முயற்சிகளில் இருக்கின்றன. எலான் மஸ்க்கின் டெஸ்லா போன்ற நிறுவனங்களும் இதில்தான் பணியாற்றி வருகின்றன. ஆனால், இவை ஒருபுறம் இருக்க இங்கு ரயில் ஓட்டுநர் இல்லாமல் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் வரை சென்றிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா ரயில் நிலையத்தில் இருந்து 84 கி.மீ., தூரத்திற்கு அதவாது பஞ்சாப் மாநிலம் முகேரியன் மாவட்டம் வரை ஓட்டுநர் இல்லாமல் ஒரு சரக்கு ரயில் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 7 மணிக்கு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. கான்கிரீட் ஏற்றப்பட்ட அந்த சரக்கு ரயில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நோக்கிய மலை சாய்வில் சென்றதாக கூறப்படுகிறது.
இஞ்சினை அணைக்காத ஓட்டுநர்கள்
ஏற்கெனவே ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் ஆகியோர் வேறு ஓட்டுநர்கள் வருவதற்காக கத்துவா ரயில் நிலையத்தில் இஞ்சினை அணைக்காமல் வைத்திருந்துள்ளனர். மேலும், ஹேண்ட் பிரேக் போடாமல்விட்டதால், அந்த மலை சாய்வில் ரயில் ஓட்டுநர்கள் இல்லாமல் தானாகவே ஓடி உள்ளது. அதாவது, ஒரு மலை சாய்வில் நீங்கள் காரை நியூட்ரலில் நிப்பாட்டும்போது, ஹேண்ட் பிரேக் போடுவது வழக்கம், போடாவிட்டால் கார் அந்த சரிவில் ஓடிவிடும். அதேதான் இப்போதும் நடந்துள்ளது.
மேலும் படிக்க | Byju's நிறுவன நெருக்கடி.. CEO ரவீந்திரனை வெளியேற்ற பங்குதாரர்கள் முடிவு...!
ஓடி வந்த ரயிலை நிறுத்த ரயில்வே துறையால் பல முறை முயற்சிக்கப்பட்டது. இருப்பினும் அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. தாஷ்வா ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள உன்சி பாஸி என்ற பகுதியில்தான், அங்கிருந்த பயணிகள் ரயிலின் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் சரக்கு ரயில் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நல்வாய்ப்பாக, அந்த டிராக்கில் வேறு எந்த ரயிலும் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது. வேறு பாதிப்போ அல்லது காயமோ இந்த சம்பவத்தால் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தரப்பில்,"அந்த ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர்கள், புதிய ஓட்டுநர்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் எஞ்சினை அணைக்காமல் விட்டுச் சென்றுள்ளனர். உன்சி பாஸி பகுதியில் அந்த ரயில் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த சரக்கு ரயிலில் ரயில்வே கட்டுமானத்திற்கான பொருள்கள் இருந்தன" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே தரப்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஒடிசா ரயில் விபத்து
முன்னதாக, கடந்தாண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவ்ரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியதில் சுமார் 296 பேர் உயிரிழந்தனர். 1200 பேர் காயமடைந்தனர். இந்த ரயில் விபத்து இந்தியன் ரயில்வேயில் பல எச்சரிக்கைகளை வழங்கியது.
தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்தியன் ரயில்வே கவனம் செலுத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டன. அந்த வகையில், தற்போது சரக்கு ரயில் எவ்வித பாதுகாப்பும் இன்றி, ஓட்டுநரும் இன்றி 84 கி.மீ., வரை கட்டுப்பாடு இல்லாமல் வந்திருப்பது மக்களிடையே அச்சத்தை விதைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அடுத்த 100 நாட்களுக்கான செயல்திட்டம்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ