ஐதராபாத்: ஐதராபாத் தில்சுக்நகர் பகுதியில் 2013 இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் பலியானது தொடர்பான வழக்கில், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி, ஐதராபாத் நகரில் வர்த்தகத்துக்கு பெயர் பெற்ற தில்சுக்நகர் பகுதியில் 2 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இவற்றில் 18 பேர் பலியானார்கள்.


இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தியது. இதில், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.


அந்த இயக்கத்தின் இணை நிறுவனர் யாசின் பட்கல், பாகிஸ்தானை சேர்ந்த ஜியா-உர்-ரகுமான், உத்தரபிரதேசத்தை சேர்ந்த அசதுல்லா அக்தர், பீகாரை சேர்ந்த தசீன் அக்தர், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அய்ஜாஸ் ஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 


இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் முதல் வழக்கு இதுவே ஆகும்.


இந்த குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக நடந்த விசாரணை முடிவில் நேற்று சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.