நானும் ஒரு தமிழன் - மார்க்கண்டேய கட்ஜூ
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக்கோரி மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜல்லிகட்டு தடைக்கு எதிராகவும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது ஒட்டுமொத்த தமிழினமே ஒன்று திரண்டு போராடிக் கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களின் வாயிலாக முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இவரின் ஆதரவை சமூக வலைத்தளத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நானும் ஒரு தமிழன் தான் என மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமுக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பதாவது:-
மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒருவேளை மறுபிறவி இருப்பது உண்மையெனில், எனது முந்தைய பிறவியில் நான் நிச்சயம் தமிழனாக இருந்திருப்பேன்.
நான் ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு செல்லும் போதும், என் வீட்டிற்கு செல்வதை போன்றே உணர்கிறேன். தமிழகத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அன்பை தாராளமாக செலுத்தும் பண்புடைய தமிழர்கள் என் மீது மதிப்பும், அக்கறையும் செலுத்தியுள்ளனர், இதனாலேயே ஒவ்வொரு முறை தமிழரை சந்திக்கும் போதும் நானும் ஒரு தமிழர் என தெரிவிப்பேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்று கொண்டது எனக்கு சில வழக்குகளில் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் சில முறை தமிழ் தெரிந்த வழக்கறிஞர்களிடம் 'உட்காருங்க' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறேன். சில சமயங்களில் 'தள்ளுபடி' என்ற வார்த்தையையும் பயன்படுத்தி இருக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.