மகாத்மா காந்தியின் படுகொலை குற்றவாலி நாதுராம் கோட்சேவை "ஒரு தேசபக்தர்" என்று கூறிய கருத்துகளுக்கு பாஜக MP பிரக்யா தாகூர் வெள்ளிக்கிழமை மக்களவையில் மன்னிப்பு கோரினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது கருத்துக்களுக்கு பதிலளித்த போபால் MP நாடாளுமன்றத்தில் "மகாத்மா காந்தி தேசத்திற்கு அளித்த பங்களிப்பை மதிக்கிறேன்" என்று செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.


மேலும் தனது அறிக்கை சிதைக்கப்பட்டதாகவும், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர் ஒரு பயங்கரவாதி என்று அழைக்கப்பட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மக்களவையில் அவர் பேசுகையில்., “சபையின் உறுப்பினர் ஒருவர் என்னை ‘பயங்கரவாதி’ என்று குறிப்பிட்டார். இது எனது கௌரவத்தின் மீதான தாக்குதல். என் மீது எந்த குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக, சர்ச்சைக்குரிய அறிக்கைக்காக தாகூரை நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பயங்கரவாதி பிரக்யா என சாடியிருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாவது., “பயங்கரவாதி பிரக்யா பயங்கரவாதி கோட்சேவை   தேசபக்தர் என்று அழைக்கிறார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இன்று ஒரு சோகமான நாள்” என குறிப்பிட்டிருந்தார்.


சிறப்பு பாதுகாப்பு குழு (Amendment) மசோதா மீதான விவாதத்தின் போது கோட்சேவைக் குறிப்பிட்ட பின்னர் பிரக்யா தாகூர், தனது கருத்துக்காக கடுமையாக சாடப்பட்டு வருகிறார். இதனிடையே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தாகூர் கருத்துக்களை மன்ற பதிவுகளிலிருந்து விலக்கிக் கொண்டார், ஆனால் அது அரசியல் கட்சிகளிடமிருந்தும் சமூக ஊடகங்களிலிருந்தும் விமர்சனங்களைத் தடுக்க உதவவில்லை.


கோட்சேவைப் பற்றிய சட்டமியற்றுபவரின் அறிக்கை பதிவு செய்யப்படாது என்பதை மீண்டும் வலியுறுத்தும் ஓம் பிர்லா, “இந்த தேசம் மட்டுமல்ல, உலகமும் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுகிறது. இந்த பிரச்சினையை நாங்கள் அரசியல் மயமாக்கக்கூடாது. ” என குறிப்பிட்டிருந்தார்.