மத்திய அரசுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திலும், தன்னாட்சி அதிகாரத்திலும் மத்திய BJP அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது. ரிசர்வ் வங்கியை கைப்பற்றி, அதன் வசம் உள்ள உபரி மூலதனத்தை கட்டுக்குள் கொண்டுவர மோடி அரசு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை நெருக்கடியில் உள்ள மத்திய அரசு, தேர்தல் வர இருப்பதால் திட்டச்செலவுகளை அதிகரிக்க எண்ணுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.


இந்நிலையில், இதற்கு வேறு வழியில்லாததால், ரிசர்வ் வங்கியின் சேம இருப்பில் இருந்து 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கேட்பதாகவும் அவர் புகார் கூறியிருந்தார். இதை அப்போதே மத்திய அரசு மறுத்திருந்த நிலையில், அதன் பிறகு ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு கூட்டமும் நடைபெற்று, ஒருசில பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக தகவல் வெளியானது.


இந்நிலையில், ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, அடுத்த 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசுக்கு பணம் தேவையில்லை என்றார்.


ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை மத்திய அரசு மதிப்பதாகவும் அவர் கூறினார். அதே சமயம், பணப்புழக்கம் மற்றும் கடன்வசதி இன்றி சில துறைகள் பாதிக்கப்படும்போது அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டியிருப்பதாகவும், ரிசர்வ் வங்கியின் மூலம் இதையே செய்வதாகவும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.