பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகளை பாராட்டி, பிரதமர் மோடி உரையாற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிலவை நெருங்கிய தருவாயில் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் தெரிவிக்கையில்., "நாட்டுக்காக வாழ்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். இவர்களை நினைத்து நாடே பெருமையடைகிறது. நமது தாய்நாட்டிற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் உறக்கம் இன்றி இரவு பகலாக உழைத்து வருகின்றனர். பின்னடைவு ஏற்படுத்திய தாக்கத்தை நான் உணர்ந்தேன்.


கடைசி வரை சந்திரயான் 2-க்காக உழைத்ததற்கு நன்றி. நிச்சயமாக நிலவை தொடும் முயற்சி வெற்றி அடையும். இந்த விஷயத்தில் இளையோர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் கனவு ஒன்றாகவே இருந்தது. எதிர்காலத்தில் நாம் மேலும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது.



இறுதி நிமிட பின்னடைவு நிரந்தரம் அல்ல, நமது விண்வெளி திட்டம் குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது. நாட்டின் வளர்ச்சிக்காக நம்ப முடியாத அளவுக்கு பணியாற்றியுள்ளீர்கள்.


குறிக்கோளை எவ்வளவு நெருங்க முடியுமோ, அவ்வளவு நெருங்கியுள்ளீர்கள். இதுவரை யாரும் முயற்சிக்காததை நீங்கள் முயற்சி செய்துள்ளீர்கள். நமது விண்வெளி திட்டத்தில் புதிய உச்சங்கள் இனிதான் வரவுள்ளன.


நானும், நாடும் உங்களுடனே இருக்கிறோம். புதிய விடியல் நமக்காக காத்திருக்கிறது. பொறியாளர்கள், விஞ்ஞானிகள் உழைப்பில் கர்வம் கொள்கிறேன். உங்கள் உழைப்பு நாட்டை தலை நிமிர வைத்துள்ளது. இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர இஸ்ரோ முக்கிய பங்கு வகிக்கிறது. சாதிக்க நமக்கான வாய்ப்புகள் இன்னும் நிறைய உள்ளது." என தெரிவித்தார்.


பிரதமர் மோடி உரையாற்றும்போது இஸ்ரோ இயக்குநர் சிவன் உள்பட, விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.